தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

2006 முதல் 2010 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டினை விதிகளை மீறி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ. பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை மறுஆய்வு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பெரியசாமியை விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பே, அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் காரணம்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகுதான் இதில் இறுதித் தீர்ப்பு தெரியவரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal