உயர்நீதிமன்றம் அனுமதியுடன் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எனத் தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் வழியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என இன்றைய பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். இதற்கு உடன்படாத அன்புமணி போட்டியாக ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இருவரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்திய நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார். அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்ட பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
