அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் உயிருடன் இருந்த நேரத்தில் திருச்சி திண்டுக்கல் சாலையில் மணிகண்டம் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி கேர் கல்லூரி என்ற பிரம்மாண்டமான கல்லூரி வளாகத்தை உருவாக்கினார். அவருடைய ஜனனி மினரல்ஸ் என்கிற கிரானைட் நிறுவனமும் அந்தப் பகுதியில் தான் அமைந்திருக்கிறது. இதற்கெல்லாம் நம்பிக்கையான நபராக செயல்பட்டு நிலம் வாங்கி கொடுத்தவர் திமுகவின் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா.

கருப்பையா

இப்படி நிலம் வாங்கும்போது விற்பவர்களிடம் ‘அமைச்சர் ஆசைப்பட்டு கேட்கிறார். அவரோட வரவு செலவு வச்சுக்கிட்டா நாளைக்கு உங்களுக்கு ரொம்ப நல்லது’ என்று சொல்லி விலையை குறைத்து பேசிவிட்டு அமைச்சரிடம் மார்க்கெட் விலையை விட அதிகமாக சொல்லி பணம் வாங்கி அதிலும் ஒரு பெரும் பகுதியை அமுக்கி விட்டார் மாத்தூர் கருப்பையா. நிலத்தை விற்ற யாரும் நேருவிடம் நேரடியாக விலை குறித்து பேச முடியாது, நேருவும் அதை பேச மாட்டார் என்பதால் இந்த விவகாரம் வெளியில் தெரியாமலே அமுங்கி போனது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று, திமுக ஆட்சிக்கு வந்து, நேரு அமைச்சரானவுடன் அவரது துறை சார்ந்த அனைத்து காண்ட்ராக்ட்கள், ட்ரான்ஸ்பர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய பொதுப்பணித்துறை தொடர்பான காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் முடிவு செய்யக்கூடிய நபராக மாறி நேருவின் வலது கரமாக வளம் வந்து தன்னை “வள” ப்படுத்திக் கொண்டார் கருப்பையா.

இன்னும் சொல்லப்போனால் திருச்சியில் 9 சட்டமன்றத் தொகுதி தொடர்பான எல்லா காண்ட்ராக்ட்டுகளிலும் தன்னை வளப்படுத்திக் கொண்ட கருப்பையா, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை கதறவிட்டதனால்தான் பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மீது அதிருப்தியாகி கதற ஆரம்பித்தனர்.

அதேசமயம் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் இவரது மைத்துனர் பாரதிதாசன் பெயரிலும் பல காண்ட்ராக்ட் வேலைகள் நடப்பது திமுக எம்எல்ஏக்கள் இடையே கொதி நிலையை அதிகப்படுத்தியது. தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்த வேலையை செய்தார் கருப்பையா.

பாரதிதாசன்

அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம் கடந்த 2007 ஆம் வருடம் தனது ஜனனி கிரானைட் நிறுவனத்திற்கு பின்னால் உள்ள நாலு ஏக்கர் நிலத்தை “ட்ரெயினிங் அண்ட் ரிஹேபிலிடேஷன் ஆஃப் அண்டர்பிரிவிலஜ்ட் மெம்பர்ஸ் ஆப் சொசைட்டி” க்கு, அதன் செயலாளரான டாக்டர் ராமகிருஷ்ணன் என்பவர் பெயரில் பத்திரப்பதிவு எண் 5835/2007 என்ற ஆவணத்தின்படி 3.79 ஏக்கர் நிலத்தை சொசைட்டிக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்தார்.

இப்படி ஒரு சொத்து எழுதிக் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்த மாத்தூர் கருப்பையா, மருத்துவரை அணுகி அந்த நிலத்தை அமைச்சர் திருப்பி கேட்கிறார் என்று கேட்டுள்ளார். அதன்பின் அவரை மிரட்டி அந்த சொத்தை தனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களுக்கு மாற்றி எழுதியவர், பின்னர் அந்த சொத்தை கடந்த 2024 ஏப்ரல் மாதம் தமது பெயருக்கும், அதாவது மாத்தூர் கருப்பையா என்ற பெயரிலும், ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை ஊராட்சிமன்றத் தலைவரான காந்தி என்கிற அழகப்பன் பெயருக்கும் மாற்றி எழுதி பத்திரம் பதிவு செய்துள்ளார். இதில் அவர்களிடமிருந்து சொத்து பதிவு செய்யப்பட்ட நாளில் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், அதன் பின் காசோலையாக ரூ.5 லட்சமும் டாக்டர் நிர்வகித்து வந்த சொசைட்டியின் வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது.
மேற்கண்ட இடத்தை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கிய விவகாரம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தெரிய வர அவர் கருப்பையாவை நேரில் வரவழைத்து ‘பல கோடி விலை போகக்கூடிய, அதுவும் தான செட்டில்மெண்ட்டாக கொடுத்த நிலத்தை நீ எப்படி திருப்பி வாங்கிக்கொண்டாய்?’ என அதிரடி வார்த்தைகளால் விளாசி எறிந்து வசைபாடியிருக்கின்றார். இருந்தாலும், கருப்பையா மீது வேறு எந்த நடவடிக்கையையும் அமைச்சர் எடுக்காதது திமுக நிர்வாகிகள் மத்தியில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து மாத்தூர் கருப்பையாவிடம் பேசியபோது; “டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பணப்பிரச்சனை இருந்தது. அதனால் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பதற்கு பதிலாக நம்ம ஆட்கள்ட்டயே விற்க்கலாம்ன்னு தொடர்பு கொண்டார். நானும் பணத்தைக் கொடுத்துட்டுதான் சொத்தை வாங்கினேன்.

இதற்கிடையே எனக்கு பிடிக்காத சில கட்சிக்காரர்கள் கிளப்பி விட்டதால் அமைச்சர் என்னிடம் கேட்டார். அந்த டாக்டர் தன் கைப்பட ‘ அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை; யாரும் என்னை மிரட்டி எழுதி வாங்கவில்லை; அப்படி எந்த அடாத செயல்களிலும் ஈடுபடவில்லை’ என்று கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். என்னை பிடிக்காத இரண்டு பேர் தான் இப்படி எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பத்திரிகைகளும் இதைப் பற்றிய விசாரிக்கிறீர்கள். நான் இப்போதும் அமைச்சருடன் தான் இருக்கிறேன். இந்த சொத்து எழுதி வாங்கிய விவகாரம் அமைச்சருக்கும் தெரியும். என்மீதான காழ்ப்புணர்ச்சியில் சிலர் பத்திரிகையாளர்களிடம் தவறாக என்னை சித்தரித்து திரித்து சொல்வதுடன், கட்சிக்காரக்களிடமும் திரித்துக் கூறியிருக்கின்றனர்” என்றார்.

மேலும் ‘சாமியாபிள்ளைபட்டியில் 9 முதல் 12 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளரை மிரட்டி வாங்கியதாகக் கூறப்படுகின்றதே…’ என்றவுடன், “நான் பணம் கொடுத்து 7 ஏக்கர் வாங்கியுள்ளேன். யாரையும் மிரட்டி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் நேருவிடமே நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்” என்றார். பொதுமக்கள், கட்சிக்காரர்களை என அனைத்து மட்டத்திலும் ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்குவதாக கட்சிக்காரர்களே கூறுகின்றனரே என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதேபோல் அந்த சொத்தை எழுதிக்கொடுத்த டாக்டரின் செல்போன் எண்ணைக் கேட்டதற்கு கொடுக்க மறுத்துவிட்டார்.இந்தநிலையில், ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி, “கருப்பையா வாங்கிய இடம் தொடர்பாக எந்த டவுட் என்றாலும் என்னிடம் கேளுங்கள், நான் தான் அதை அவருக்கு வாங்கிக்கொடுத்தேன்” என்றவர், டாக்டர் ராமகிருஷ்ணன் அலைபேசி எண்ணையும் கொடுத்தார். ஆனால் நம் அலைபேசி அழைப்புக்கு டாக்டர் பதிலளிக்கவில்லை.

திமுகவில் மாத்தூர் கருப்பையாவின் பங்களிப்பு குறித்து விசாரித்தபோது, ‘ இவரு அண்ணன் கிட்ட நல்லா க்ளோஸா இருந்தாரு, அமைச்சரோட மாட்டுப்பண்ணைக்கு தேவையான மாடுகளை வாங்கி விற்று வந்தவர்தான் கருப்பையா. இவரோட மாமனார், மச்சான் இவங்க எல்லாத்தையும் கூட்டாளியாக வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலையும் தன் கைவரிசையைக் காட்டி கோடிக்கணக்கில் அமைச்சருக்கு இணையா சம்பாதித்திட்டிருக்கார். மணிகண்டம் மட்டுமல்ல, விராலிமலை பக்கமும் பல ஏக்கர் நிலங்களை வாங்கி பலகோடிகளை சம்பாதித்து அமைச்சர், எம்.எல்.ஏக்களுக்கு இணையாக மாத்தூர் கருப்பையா ரவுண்ட்ல இருக்காருங்க’ என்கின்றனர் திமுகவினரே.

இந்த மாதிரி பலரையும் மிரட்டி வாங்கிய நிலங்கள் குறித்த பல விஷயங்கள் நேருவுக்கு தெரியாமல் போனதுதான் எப்படி என திமுக விசுவாசிகள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன் இறந்து போன புதுக்கோட்டை மாநகர செயலாளர் செந்தில் இவருடன் சேர்ந்து பல நில வணிகங்களில் ஈடுபட்டிருந்தார். புதுக்கோட்டை செந்தில் மனைவி திலகவதி, புதுக்கோட்டை மேயராக இருப்பதால் கருப்பையாவின் உறவு அவருக்கு ரொம்பவே சௌகரியமாக இருந்தது. செந்தில் மறைவுக்குப் பிறகு செந்திலின் பெயரில் செந்திலுக்காக செய்யப்பட்ட முதலீடுகள் குறித்த உயர்மட்ட பஞ்சாயத்துக்கள் பல நடந்து, கருப்பையாவிடமிருந்து பல கோடிகள் மேயர் திலகவதிக்கு கை மாறியதையும் அதில் பெரும் பகுதியை கருப்பையா அமுக்கி விட்டதையும் திமுகவினரே ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் நடந்த திமுகவினரின் நேர்காணலின்போது கட்சித் தலைவர் ஸ்டாலின் இவரிடம், “என்ன, வாரம் ஒரு பத்திரிகையில் உன்னை பற்றி செய்தி வருதே…?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு இவர் ‘நான் தீவிர கட்சி பணி செய்வதால் பொறாமையில் அப்படி சொல்கிறார்கள்’ என்று சொல்லி சமாளிக்க, “தேமுதிகவில் இருக்கிற உன் மச்சானை கூட திமுகவில் சேர்க்க முடியல… நீ கட்சி வளக்குற லட்சணம் நல்லாவே தெரியுது” என்று எரிச்சலுடன் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal