அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்துக்கு புறப்பட்டார். அப்போது அவரது காரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏற முயன்றார். இதற்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏற வேண்டாம் எனவும், பின்னால் வரும் வேறு காரில் ஏறி வருமாறும் கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் செல்லூர் ராஜுவை அண்ணா….. அண்ணா……. வெளிய வாங்கண்ணா…. வேற வண்டியில் வாங்க அண்ணா…. என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடு தான் தனது காரில் அவரை ஏற்றி செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.
இந்த விமர்சனங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், செல்லூர் ராஜுவும் விளக்கம் அளித்தனர். ஆனாலும், செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிசாமி கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசியதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை என்கிறார்கள்.
