திருச்சிக்கு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வந்துவிட்டது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி பொங்கினாலும் இன்னொரு பக்கம் இந்த பேருந்து நிலையம் வந்த பிறகு அந்தப் பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட்டுகளில் பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

சர்ச்சைக்குரிய இடம்…

“போச்சு… எல்லாம் போச்சு சார்… சிறுக சிறுக சேத்து வச்ச பணத்த கொண்டு போய் பஞ்சப்பூர்ல பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலேயே ஒரு ப்ளாட் (மனை) வருதுன்னு வாங்கி வச்சேன். இப்போ அந்த ப்ளாட்டுக்கு போற பாதையில யாரோ குறுக்க வேலி போட்டு மறச்சுட்டாங்க.

இந்த மாதிரி ஏதாவது அக்கப்போர் வந்துரும்னு தான் பாத்து பாத்து டிடிசிபி (ஞிஜிசிறி) அப்ரூவல் ரேரா (ஸிணிஸிகி) பர்மிஷன் எல்லாம் படிச்சு பாத்து வாங்குனேன்“ என்று பதறினார் ஒருவர். அவரை ஆசுவாசப்படுத்தி பேசினோம்.

“நாப்பது லச்சம் சார்… பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல நல்ல இடம்னு எல்லாரும் சொல்லவும் வாங்குனேன். இப்போ எங்க ப்ளாட்டுக்கு போற பாதையில் நடுவுல வேலி போட்டு ரெண்டா தடுத்து வச்சிருக்காங்க. இந்த பிரச்சனை எல்லாம் தீந்து என்னைக்கு நான் வீடு கட்டி வாழ்றது“ என்று வேதனையுடன் புலம்பினார்.

பிரேமா

அவர் குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பிரேமாவிடம் பேசினோம். “இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. அதுல இப்போ பிளாட் போட்டு விக்கிறோம். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நாங்க போய் வந்த சாலையில் இப்போ கோபாலன், ராமசாமி, சங்கர்கணேஷ், ரங்கன், சீனிவாசன் ஆகிய ஐந்து பேரும் கடந்த 15 ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேல 500 அடி நீளத்துக்கு 30 அடி சாலையை ரெண்டா பிரிச்சு நடுவுல கல் ஊன்றி கம்பி வலை போட்டு கேமராவும் போட்டு பாதையை மறித்து வைத்திருக்கிறார்கள். இவங்க மறைமுகமா எங்கள மிரட்டி பணம் பிடுங்குறத நோக்கமா வச்சுதான் செயல்படுறாங்க.

‘ இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் ஆவணம் இருக்கு?‘ ன்னு கேட்டா அதை கொடுக்க மாட்டேங்கிறாங்க. கடந்த பல வருடங்களாக அளுந்தூர் ஊராட்சியால பராமரிக்கப்பட்டு இப்போ தார் சாலை போடுவதற்கே சாங்சன் ஆகி இருக்கிற இடத்தை தன்னோடது என்று சொல்றாங்க.

சுப்பையா

போலீஸ் இதை ‘ சிவில் மேட்டர்‘ னு சொல்றாங்க. வருவாய்த்துறை அதிகாரிகள் ‘ நாங்க பல வேலையா இருக்கோம். பொறுமையாதான் வந்து விசாரிக்க முடியும்‘ என்று சொல்றாங்க. எல்லா ஆவணங்களையும் கொடுத்து பணம் கட்டி டிடிசிபி, ரேரா எல்லா அனுமதியும் வாங்கி எந்த மரியாதையும் இல்லாம போச்சு. இது கோர்ட்டுக்கு போனால் பல வருடங்கள் தாமதமாகி நாங்க போட்ட முதலீடு வட்டியிலேயே மூழ்கி போய் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உண்டாக்கிவிடும். அதனால நாங்க ஏதாவது பணம் கொடுத்து பேசி முடிச்சிடுவோம் அப்படின்னு அவங்க நினைக்கிறாங்க“ என்றார் அவர்.

நம்மிடம் பேசிய அதே ஊரில் வசிக்கும் சுப்பையா என்பவர், “நாங்கள் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் இங்கே வாழ்கிறோம். எங்கள் குலதெய்வம் எல்லம்மாள் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும் இடம் இந்த பிரேமாவுக்கு சொந்தமான நிலத்துக்குள்தான் இருக்கிறது. நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் சாமி கும்பிடும் மரத்தை சுத்தி எட்டரை சென்ட் இடத்தை விட்டு விட்டு மற்ற இடத்தில் மனை பிரிவு போட்டு அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில நாங்க 250 வருஷமா 5 தலைமுறைகள் பயன்படுத்திக்கிட்டு வந்த 30 அடி சாலையை ரெண்டா பிரிச்சு நடுவில் வேலி போட்டு அமைதியாக இருக்கும் ஊரில் ஜாதி பிரச்சனை வர மேற்படி கோபால், சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் செய்கிறார்கள். இது தொடர்பாக நானும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன்’’ என்றார்.

கோபால்

புகாருக்கு உள்ளான கோபாலிடம் பேசினோம். “அது எங்கள் பூர்வீக இடம். அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்பதற்கு ஆவணங்கள் வைத்திருக்கிறேன். நாங்கள் இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்கிறோம். இணக்கமாக பேசி செய்து கொள்ளலாம் என்று பார்த்தோம். அவங்க தான் என் மேல புகார் சொல்லுவாங்களா ? நிலத்தின் உரிமையாளர், அங்கே மனை பிரிவு போட்டிருக்கிற இன்ஜினியர், இந்த சுப்பையா எல்லோரும் சேர்ந்து மிரட்டி எங்க இடத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் என்று நானும் புகார் சொல்கிறேன். நீங்க பேசுனதை நான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கிறேன். நான் பேசுவதையும் ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கோங்க“ என்றார் அவர்.

நில உரிமையாளர்கள் பிரேமா, உமா இருவரும் இணைந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும் செவல்பட்டி கிராம பொதுமக்கள் ரோட்டின் குறுக்கே வேலி அமைத்த சங்கர்கணேஷ், ராமசாமி, கோபாலன், ரங்கன் ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரிலும் மணிகண்டம் காவல் நிலையத்தில் 21 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. விசாரணை செய்த உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம்.

ராமசாமி, சங்கர் கணேஷ்

“இந்த சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக நில உரிமையாளர், ஊர் மக்கள் கொடுத்த இரண்டு புகாரின் மீதும் மனு ரசீது போட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நபரை கூப்பிட்டு விசாரித்த போது ‘அது தொடர்பான ஆவணம் கோர்ட்டில் இருக்கிறது‘ என்று சொன்னார். என் மேலதிகாரிகளிடம் அறிவுரை பெற்று பி.டி.ஓ சாரிடம் பேசினேன். ஆர்.டி.ஓ வுக்கு நீங்கள் தபால் கொடுங்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில் இரண்டு தரப்பையும் கூப்பிட்டு அவர் விசாரித்து முடிவு சொல்வார். இதனிடையே குற்றச்சாட்டுக்கு ஆளான கோபால், சங்கர்கணேஷ் உள்ளிட்டவர்கள் காவல் துறைக்கு ‘இது சிவில் தன்மையுள்ள பிரச்சனை. இதில் எங்களை கூப்பிட்டு விசாரித்து டார்ச்சர் செய்யக்கூடாது‘ என்று ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் ‘ மக்களுடன் ஸ்டாலின்‘ நிகழ்ச்சிக்காக போயிருக்கிறார்கள்.

இந்த சாலை பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டு பஞ்சாயத்து சார்பில் அதில் மண்ணடித்து தார் ரோடு போடுவதற்கும் சாங்சன் ஆகி தயாராக இருக்கிற நிலையில் பக்கத்தில் ஏற்கனவே விற்ற நிலத்தில் ஒரு பகுதியை தனக்கு சொந்தம் என்று சொல்லி அத்துடன் சேர்த்து இந்த சாலையில் உள்ள பகுதியும் தன்னுடையது என்று சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் பிரச்சனை செய்கிறார்கள். காவல்துறையோ , எதிர் தரப்போ அந்த இடத்திற்கு வந்து ஏதாவது செய்தால் நம்மை கோர்ட்டுக்கு இழுக்கும் வகையில் அங்கே ஒரு சோலார் மின்சக்தியில் இயங்கும் சர்வைலன்ஸ் கேமரா போட்டு வைத்திருக்கிறார்கள். அவசரப்பட்டால் போலீசும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அதனால் நாங்களும் நிதானமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்“ என்றார் நம்மிடம்.

வேலி போடப்பட்ட இடத்தை போய் பார்த்தோம். 30 அடி சாலையில் நட்ட நடுவே ஸ்ட்ராங்கான கருங்கல் ஊன்றப்பட்டு கம்பி வேலி போடப்பட்டு அதன் ஒரு முனையில் சோலார் மின்சக்தியில் இயங்கும் கேமரா பொருத்தப்பட்டு அது சைரன் சத்தம் எழுப்பியப்படியே சுற்றி சுற்றி நம்மை கண்காணித்தது. அதிலேயே சிம் கார்டு போடப்பட்டு அந்த கேமரா முன்னால் யாராவது நடமாடும் அசைவு தெரிந்தால் உடனடியாக வைஃபை மூலம் அந்த கேமராவை பொருத்தியவரின் செல்போனுக்கு சிக்னல் கொடுத்து அலட் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.

cctv camera

முன்பெல்லாம் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் நிலத்தில் சாலை ஓரமாக ஒரு குடிசை போட்டு வைத்துக்கொண்டு பணம் கேட்டு பஞ்சாயத்து வைப்பார்கள். இப்போது சாலை நடுவே வேலி போட்டு சிசிடிவி கேமரா வைத்து வழக்கு போடுகிறார்கள்.

மொத்தத்தில் எப்படி சென்னை நகரின் விரிவாக்கம் அங்கே ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை வளர்த்து விட்டதோ, அதேபோல் திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள பகுதியிலும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள். ஏற்கனவே நிலம் தொடர்பாக இந்தப் பகுதியில் கிளம்பி இருக்கும் பல பிரச்சனைகள் இதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal