‘நான் செத்தாலும் சாவேனே தவிர, ஒரு போதும் அ.தி.மு.க.வை காட்டிக் கொடுக்கமாட்டடேன்’ என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராஜேந்திர பாலாஜி, தொண்டர்கள் முன் கண்ணீர் சிந்தினார்.

சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “மோசடி வழக்கில் தன்னை கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது, அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.
நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னை தனிமைச் சிறையில் அடைத்து என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள்.
நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன். சிறைக்குள் சிறை என தனிமைச் சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள். சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை என ஆதங்கப்பட்டார். கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை” என பேசிய போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் சிந்தினார்.
