திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார். அதே சமயம் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் 200 பேரை மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்திப்பாரா என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியின் பயணத் திட்டம் தங்களுக்குத் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

இந்த நிலையில், இன்று இரவு 10:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்கள்.

இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஓபிஎஸ் இந்த அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வி நிலவுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஓபிஎஸ்.

இந்தச் சூழலில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவுடன் – பாஜக கூட்டணி வைத்துள்ளதால் ஓபிஎஸ் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறிவிட்டார். எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். தனக்கு பதவிகள் வேண்டாம், தன்னை நம்பி இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு பிடி கொடுக்காத நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் எதுவும் கைகூடவில்லை. இந்நிலையில் தான் பிரதமரின் தூத்துக்குடி வருகையை ஒட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க நீங்கள் தூத்துக்குடி வருவதாக அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். இந்த சூழலில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழி அனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஓபிஎஸ், இன்று பிரதமர் மோடியை சந்திக்கக்கூடும் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட ஓ.பன்னீர்செல்வம் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal