நாமக்கல்லில் ‘‘கிட்னி விற்பனை செய்ததற்காக, 6 லட்சம் ரூபாய் கொடுத்தனர்’’ என, பெண் அளித்த பகீர் வாக்குமூலத்தால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகரை சேந்தவர் ஆனந்தன், 45; கிட்னி புரோக்கர். இவர், அப்பகுதியை சேர்ந்த கவுசல்யா, விஜயா ஆகிய பெண் தொழிலாளர்களிடம் ஆசைவார்த்தை கூறி, கிட்னி விற்பனை செய்ய வைத்துள்ளார்.

தகவலறிந்த, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார், கடந்த, 17ல், அன்னை சத்யா நகர் பகுதியில் விசாரணை நடத்த சென்றனர். தகவலறிந்த ஆனந்தன் தலைமறைவானார்.

நேற்று முன்தினம் இரவு, சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன் மற்றும் மருத்துவ குழுவினர், அன்னை சத்யா நகர் குடியிருப்புக்கு விசாரணை நடத்த வந்தனர்.

அங்கு, கிட்னி விற்பனை செய்த கவுசல்யாவை, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் பகீர் தகவல்கள் வெளியாகின.நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது: கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ‘கிட்னி’ அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்தவர்களின் பட்டியல் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. அதில், குறிப்பாக ஆறு பேரின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தோம். அவை அனைத்தும், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யாநகர், ஆவாரங்காடு பகுதிகளை சேர்ந்த முகவரியாக இருந்தது. இந்த முகவரியில் நேரில் சென்று விசாரணை செய்தபோது, ஐந்து முகவரியும் போலி என, தெரியவந்தது.

இதில், கவுசல்யா, 6 லட்சம் ரூபாய்க்கு, தன் ஒரு கிட்னியை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலம், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது. முழு தகவல்களையும் வெளியில் சொல்ல முடியாது. மற்றொரு பெண் விஜயா, குமாரபாளையத்தில் உள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், கிட்னி புரோக்கர் ஆனந்தன், நேற்று முன்தினம் தலையில் தொப்பி அணிந்துகொண்டு, ஸ்கூட்டரில் அன்னை சத்யாநகர் பகுதிக்கு வந்துள்ளார். தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், அங்கு சென்றுள்ளனர். ஆனால், போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து ஆனந்தன் தப்பியுள்ளார்.

அவரை பிடிக்க, நேற்று திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப் படை போலீசார் பள்ளிப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரை தேடி வருகின்றனர். அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை செய்ய வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், ஆளும் தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு கம்பெனி போல அரசு அலுவலர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஏழை விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal