தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு வெளியாகியிருக்கும் காரணம்தான் பகீரைக் கிளப்பியிருக்கிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளையும், வேட்பாளர் பட்டியல்களையும் வெளியிட்டு தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ அணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுடன், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் மற்ற கட்சிகளும் தங்களது வேட்பாளர் தேர்வு பணிகளை விரைவுபடுத்தியுள்ளன. மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதையும் கூட்டணி தலைமை கடந்த மார்ச் 28ஆம் தேதியே அறிவித்துவிட்டது.

காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று வரை காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகவில்லை. இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட காரணம், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் என கூறுகின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்க்ள். குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற மத்திய தேர்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலை பார்த்த ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தொகுதிகளில் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது அனுமதி இல்லாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடாது என்று ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் மீண்டும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதற்கிடையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கலுக்கான நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றது. வரும் ஏப்ரல் 2, 4 மற்றும் 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.

தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்றிரவு தில்லி திரும்பியதும் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று அல்லது நாளை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal