வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த விஜய் அதனை திடீரென ரத்து செய்துள்ளார். காரணம், பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் தலைநகர் சென்னையே ‘ஸ்தம்பித்து’ போனது.

தவெக தரப்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், இன்று அங்கு அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், அந்தப் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பூரைத் தொடர்ந்து இன்றே கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்கான அனுமதியும் பெறப்பட்டது.

இந்நிலையில், பெரம்பூரில் பிரச்சாரம் முடித்துக்கொண்டு கொளத்தூருக்கு செல்ல போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தவெக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வந்து தவெக வேட்பாளர் பாபுவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், அங்கு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வில்லிவாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரிக்க இருந்தார். இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதிக்கான பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் தொகுதியில் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார்.

அவர் தனது அறிவிப்பில், பாதுகாப்பு சரியாக இல்லாத காரணத்தால் விஜயால் வர முடியவில்லை. கொளத்தூரிலும் பேச முடியவில்லை. எனவே இங்கு வேறு ஒரு நாள் வருவார் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பிரசாரம் ரத்தானதற்கான காரணம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விஜய்க்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும் என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “பிரச்சாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரச்சார இடத்தில் இருந்து இன்னொரு பிரச்சார இடத்திற்கு நான் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் எனது பிரச்சார வாகனம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு எனக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.

எனது பிரச்சார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சூழலை முடக்க கபட நாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal