திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கனிமொழி எம்.பி பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது வானதி சீனிவாசன் கூறுகையில், ‘‘அடிப்படையிலிருந்து அரசியல்வாதியாக வராமல், டெல்லி அரசியல்வாதியாக அறியப்பட்டவர். ஆனாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, தமிழகத்தின் பிரச்சனைகளை பேசுவதற்கும், தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைத்தவர். அவர் மாநில அரசியலுக்கு வந்தால், நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சமூகநீதி, பெண் உரிமை என்று பேசக்கூடிய திராவிட முன்னேற்ற கட்சியில், ஒரு முதலமைச்சரின் மகன் தான் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதைத்தான் இதுவரை வைத்துள்ளார்கள். கருணாநிதியின் மகனுக்கு தான் பொறுப்பு கிடைத்தது. அவருடைய மகனுக்குத்தான் துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு கூட இரண்டாம் பட்சமாக தான் நடத்தப்பட்டு வருகிறார்கள்’’ என்று பேசினார்.

திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாளில் இருந்து இந்த கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளனர். ‘‘புறம் காத்தது போதும், அகம் காக்க வா’’ என அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அது போல் திமுகவில் விருப்பமனு விநியோகம் செய்த போது கூட கனிமொழி போட்டியிட வேண்டும் என்றுதான் 35க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் அவரது பெயரில் அவரது ஆதரவாளர்கள் கொடுத்தனர். ஆனால் திமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் கனிமொழி மாநில அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஒரு முறை கனிமொழியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வி கேட்ட போது கூட அவர் மறுப்பு சொல்லாமல், தொண்டை கட்டியிருப்பதால் பிறகு பேசுவதாக தெரிவித்திருந்தார்.

அது போல் நெல்லை, -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் விடுத்த கோரிக்கை மனுவில், ‘‘நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரவலாக வசித்து வருகின்றனர்.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம் திகழ்கிறது. மேற்கண்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு, சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக சேவை செய்து வருவதையும், அவர்களில் எங்களது சமுதாயத்தை சேர்த்த பலருக்கு தங்களது நல்லாட்சியில் அமைச்சர் பொறுப்புகள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எங்கள் சமுதாயம் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூருகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எங்கள் நெல்லை, – தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், மகளிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal