பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, ராமதாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து மூன்று நாட்களுக்குள் உத்தரவிட ஆணையிட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சென்னை 12-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்புதான் பாமக கட்சிக்கான அங்கீகாரமே ரத்தானது. 2025-&28 வரை மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுக்க சிறப்பு நிர்வாக குழு எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையத்துக்கும் அன்புமணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அன்புமணி ராமதாஸ் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக தயாரித்து தேர்தல் ஆணையத்தை அன்புமணி ஏமாற்றியுள்ளார். இது குறித்து ஐந்து முறை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு என்ன இவ்வளவு ஆர்வம் என தெரியவில்லை” எனவும் அவர் வாதங்களை முன்வைத்தார்.

மேலும், “தி.நகரில் உள்ளது அன்புமணியின் வீடு, ஆனால் அதை பாமக அலுவலகமாக தேர்தல் ஆணையம் எப்படி கருதியது? அன்புமணியின் பதவிக் காலம் முடிந்தும், தேர்தல் ஆணையம் எப்படி அன்புமணியை தலைவராக ஏற்றது என தெரியவில்லை? அவர் தேர்தலில் போட்டியிடட்டும். நாங்களும் போட்டியிடுகிறோம். மக்கள் முடிவு செய்யுட்டும்” என வாதிட்டார்.

பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராஜி, “இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட முறையே தவறானது. ராமதாஸ் தலைவராக உள்ளார் என்றால், ஏன் தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்?” என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “இந்த வழக்கு தந்தை -& மகனுக்கு இடையே உள்ள பிரச்சினை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று வாதிட்டார்.

அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, “நிறுவனர் ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். இது தந்தை – & மகனுக்கு இடையேயான பிரச்சினை மட்டுமே. ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

பாமக பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருப்பதால் மாம்பழம் சின்னம் வேறு யாருக்கும் சென்று விடக் கூடாது என்பதற்காக சின்னம் பெறப்பட்டது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்திருக்கக் கூடாது என்பதை தான் ராமதாஸ் விரும்புகிறாரா? அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததால் விதிகளின்படி மாம்பழம் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என்றாலும், இந்த முறை சின்னம் கிடைக்காமல் தேர்தலில் நின்றால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும்.

2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டு ராமதாஸ் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது போலியானது. பொதுக்குழு நடத்தப்படும் என 21 நாட்களுக்கு முன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து அதன்பின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அப்படி கூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை.

பழைய முகவரியை மாற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவிப்பதில் இருந்தே, தி.நகர் அலுவலகத்தில் ஏற்கெனவே பாமக அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பதை ராமதாஸ் ஏற்றுக் கொள்கிறார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில், “அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாமக என்ற பெயரில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக இலவச சின்னமான மாம்பழத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் சின்னம் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கூட குறிப்பிட்ட பிரிவுகளை தவிர சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையம் முடிவில் தலையிட முடியாது. 2 ஆண்டுகள் எந்த அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வந்ததோ? அந்த முகவரிக்குத்தான் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது” என்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal