அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட சுமுகமாக முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகள் ‘தொகுதி ஒதுக்கீட்டை’ இறுதி செய்து ஆச்சர்யமளித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.

திமுக ஏற்கெனவே இருந்த தனது கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை கூடுதலாக இணைத்துள்ளது. இதுமட்டுமின்றி அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றோரையும் திமுகவில் சேர்த்துள்ளது. அதே வேகத்தில், கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு கட்சியாக தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்து வருகிறது.
இந்தச் சூழலில், அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகவும், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்க டெல்லி தலைமை அழுத்தம் கொடுப்பதாகவும் யூகங்கள் பரவின. மேலும், பாமக, அமமுக, தமாகா போன்ற கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்டு நெருக்குவதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், இன்று பாஜக, பாமக, அமமுக எனும் மூன்று முக்கிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளார் இபிஎஸ். அதிமுக அணியில் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெறும் கட்சிகள் இவை மூன்றும்தான். மற்ற கட்சிகளுக்கு எல்லாம் ஒற்றை இலக்க தொகுதிகள்தான் என்பதால் அவை குறித்த அறிவிப்புகள் அடுத்தகட்டத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது. இன்றைய தினமே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜி.கே.வாசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
