ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறவுள்ள கேரளா 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியது. வோட் வைப் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக் கணிப்பு பிரத்யேகமாக சி.என்.என். நியூஸ்18 வெளியாகியுள்ளது.

கேரள அரசியல் களத்தில் பல பத்தாண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2025 உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு எதிரான மனநிலை மக்களிடையே வெளிப்படையாகக் காணப்பட்டது. காங்கிரஸ்- இடது சாரி என்ற இருமுனை போட்டியாக இருந்த கேரள அரசியல் களத்தில் இன்று பாஜக தவிர்க்கமுடியாதபடி உள்வாங்கபட்டிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியை கைப்பற்றியதன் மூலம் தனது வருகையைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 2025ம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியைப் பாஜக கைப்பற்றியது. இது, தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, பாஜக தனது வாக்கு வங்கியை 5% சதவீதத்தில் இருந்து 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது, கேரள அரசியலின் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகால மாநில அரசின் செயல்பாடுகள், அடுத்த முதல்வர் வேட்பாளர் பற்றிய விருப்பங்கள், கேரளாவின் தற்போதைய முக்கிய பிரச்சனைகள், காங்கிரஸ் வாய்ப்புகள் பறிக்கும் காரணிகள், பாஜக பரவலுக்கான முட்டுக்கட்டைகள் போன்ற பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டன. 5,146 பேர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் மாநிலத்தின் நிலவும் அரசியல் மனநிலை குறித்த புரிதல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 5 ஆண்டில் மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக அமைந்ததாக 37.9% பேர் தெரிவித்துள்ளனர். போதியதன்மையில் இருப்பதாக 10.7% பேரும், மோசமான நிலையில் இருந்ததாக 43.1% பேர் தெரிவித்துள்ளனர். அடுத்த முதல்வர் வேட்பாளராக சிபிஎம் கட்சியின் பினராயி விஜய் வர விரும்புவதாக 29.2% பேரும், காங்கிரஸ் கட்சியின் வி. தா. சதீசன் வர விரும்புவதாக 29% பேரும் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் 45%க்கும் மேற்பட்டோர் இஸ்லாம், கிறித்தவத்தை பின்பற்றுகின்றனர். இந்த சமய மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றனர். தொடக்க காலத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது காங்கிரஸின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய சரிவை ஏற்படுத்திய போதிலும், சிறுபான்மையினரின் ஒருங்கிணைந்த ஆதரவு காங்கிரஸை வலுவான நிலையில் வைத்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கும் நிலவும் உட்கட்சி பூசல் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இது மிகப்பெரிய பாதகமாக அமையும் என 45.5% பேர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய பாஜக வளர்ச்சி ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் ஈழவா உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவு, தற்போது பாஜகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், கேரள மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் வரலாறுகளை பிரதிபலிக்கும்படியான அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவதில் பாஜக தடுமாறுவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளன.

கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 64-70 இடங்களை கைப்பற்றும், சிபிஎம் தலைமையிலான கூட்டணி 68-74 இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 1-3 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal