தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இன்றுவரை இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்தார்.பின்னர் ஐடிசி ஹோட்டலுக்கு சென்ற பியூஸ் கோயல் அங்கிருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரும் சென்றனர். அவர்களுக்கு சிரித்த முகத்துடன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக தலைவர்களைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதிமுக அலுவலகத்துக்கு வருகைத் தந்தார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அதிமுக அலுவலகத்துக்கு வந்த டிடிவி தினகரனை சி.விஜயபாஸ்கர், காமராஜ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன், ஜெயலலிதா நின்று கையசைக்கும் பால்கனியில் இருந்தவாறு தொண்டர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றார். டிடிவி தினகரனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணியும் அதிமுக அலுவலகத்துக்கு வருகைத் தந்தார்.
பின்னர் சிறுது நேரம் கட்சி அலுவலகத்துக்குள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பாஜகவுக்கு – 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக, தமாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, ஐஜேகே உள்ளிட்டவை மொத்தம் 178 தொகுதிகளில் இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு
அதிமுக 179+12 – 191
பாமக 23
பாஜக 20
தமாகா 6 (இரட்டை இலை)
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 (இரட்டை இலை)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 (இரட்டை இலை)
மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 (இரட்டை இலை)
மூவேந்தர் முன்னணி கழகம் 1 (இரட்டை இலை
புரட்சி பாரதம் கட்சி 1 (இரட்டை இலை)
பசும்பொன் தேசிய கழகம் 1 (இரட்டை இலை) ஆகிய இடங்களில் போட்டியிட்ட என்பது குறிப்பிடத்தக்கது.
