திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிதான் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலை, கொல்லிமலை அடிவாரத்தில் வரும் புளியஞ்சேலை நீர்வீழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாகும்!
துறையூர் தொகுதி தி.மு.க.வைப் பொறுத்தளவில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். சோபனபுரம் பகுதியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமாரும் சீட் கேட்டு வருகிறார். ஆனால், சரண்யா மோகன்தாசுக்கு கே.என்.நேருவின் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அவரது உறவுக்காரருமான துறையூர் மெடிக்கல் முரளியின் ஆதரவு இருப்பதால், அவருக்குத்தான் இந்த முறை சீட் என்கிறார்கள்.
ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் மிகப்பெரிய மல்லுக்கட்டே நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, அறிவழகன் விஜய், சரோஜா இளங்கோவன் உள்ளிட்டோர் ரேசில் இருந்தாலும், தற்போது அறிவழகன் விஜய்க்கும், சரோஜா இளங்கோவனுக்கும் இடையேதான் மல்லுக்கட்டு நடக்கிறது.
துறையூர் தொகுதியில் இருவரில் யார் களத்தில் இறங்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றியை யாரால் தடுக்க முடியும் என சீனியர் ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், தற்போதைய துறையூர் சட்டமன்றத் தொகுதி, முன்பு உப்பிலியபுரம் தொகுதியாக இருந்தது. தவிர, அ.தி.மு.க.வின் கோட்டையாகவும் விளங்கியது. மறைந்த முதல்வர் கலைஞரே உப்பிலியபுரம் தொகுதியை ‘உப்பில்லாத ஊர்’ என்று விமர்சனம் செய்தார். அந்தளவிற்கு அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த உப்பிலியபுரம் தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் சிலர் ‘மன்னரிடம்’ கைநீட்டி, சொந்தக்கட்சி வேட்பாளர்களுக்கே உள்ளடி வேலைகளை பார்த்ததன் விளைவு இன்றைக்கு துறையூர் தொகுதி தி.மு.க. கோட்டையாக மாறிவிட்டது.

எனவே, மீண்டும் துறையூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றால் அறிவழகன் விஜய் போன்றவர்களை வேட்பாளராக களத்தில் இறக்கினால்தான் வெற்றி பெற முடியும். தி.மு.க. சார்பில் களமிறங்கும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தான் அ.தி.மு.க.விலும் கொஞ்சம் டஃப் ஃபைட் கொடுக்க முடியும்.
தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளாக துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வரை தீபாவளி, பொங்கலுக்கு வேட்டி, சேலை அடங்கிய பரிசு தொகுப்புகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்தவர்தான் அறிவழகன் விஜய். இவர் தேர்தல் சமயத்தில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து சீட் கேட்பவரல்ல. அதே போல், தொகுதியில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கட்சி பாகுபாடின்றி கலந்துகொள்வார். எனவே, கட்சித் தலைமை உளவுத்துறையின் மூலம், யாரை வேட்பாளராக களத்தில் இறக்கினால், துறையூர் தொகுதி அ.தி.மு.க. வசமாகும் என்பதை விசாரித்து, வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை கணித்து களமிறக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
