தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லி சென்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவே அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் அமித் ஷாவை, தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு, தேர்தல் களம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.

அமித் ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், ‘‘தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடம் பேசவில்லை. ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே பேசினேன். நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதலமைச்சர் பயப்படுகிறார். 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை எளிமையாக பெற்றுத் தரும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது. சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை’’ என்றார்.

இதற்கிடையே தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் சைதாப்பேட்டை, நாங்குநேரி, சோளிங்கர் உள்ளிட்ட 12 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி 6 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்திருந்த நிலையில், அமித் ஷாவை சந்தித்தப்பின் 12 தொகுதிகள் ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal