தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து, நவல்பட்டு விஜி களத்தில் குதித்திருப்பதுதான் திருச்சி அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
யார் இந்த நவல்பட்டு விஜி..?-
தொழிலதிபரான நவல்பட்டு விஜி, தி.மு.கவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில் விஜிதான் வேட்பாளர் என்று முடிவானது. ஆனால், அன்பில் மகேஷை வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். இதையடுத்து கே.என்.நேரு முகாமுக்குத் தாவிய விஜி, அங்கு முக்கியத் தளகர்த்தராக தொடர்ந்தார். கட்சிப் பணிகளில் மிகவும் ஆர்வமாக செயல்படக்கூடியவர் நவல்பட்டு விஜி என்கிறார்கள்.

2021ல் திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரானார். இவருக்கும் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த திருவெறும்பூர் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. கட்சி பேனர்கள் மட்டும் போஸ்டர்களில் அன்பில் புகைப்படத்தை தவிர்த்து, கே.என்.நேரு புகைப்படத்திற்குற்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவல்பட்டு விஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு த.வெ.க.வில் இணைந்தார் நவல்பட்டு விஜி! 2026 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து களமிறங்க காத்திருக்கிறார் நவல்பட்டு விஜி என்கிறார்கள். அன்பிலை எதிர்த்து இவர் களமிறங்குவதற்கு மறைமுகமாக ‘மன்னரின்’ ஆசியும் இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!
அன்பில் மகேஷும், நவல்பட்டு விஜியும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுக்கள் பிரியும், அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா என அ.தி.மு.க.வும் எதிர்நோக்கியிருக்கிறது. ஆனாலும், அன்பில் மகேஷை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!
