தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் தெரிவித்த புகாரை தொடர்ந்து வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூரில் இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, விளையாட்டு உபகரணங்களை வழங்க முயன்றுள்ளார். இந்தத் தகவல் வெளியில் கசிந்தவுடன் மேயர் சுஜாதா அவசர அவசரமாக காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த காட்சியினை அங்குவந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சியில், காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மேயர் சுஜாதா தனது முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வணிக வளாகத்தில் இருந்து வெளியே வந்த மேயரின் காரை அங்கு பணியில் இருந்த தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி விசாரணை நடத்தினர். காரை சோதனையிட்டு விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர். ஆனால், மேயர் சுஜாதாவின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிச் சென்றிருக்கிறார். இதுபற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலெட்சுமியிடம் அ.தி.மு.க வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாராக பதிவு செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம் மற்றும் அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மேயரின் ஓட்டுநர் மீது போலீஸார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து, இன்று மேயர் சுஜாதாவின் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal