நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி சர்ச்சையாகி, அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கில் த.வெ.க. நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து, த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல், அரசின் அடுக்குமுறைக்கு எதிராக gen z புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, கலவரத்தைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக, சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே அந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி, 2025ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, புகார்தாரரான சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதற்கு கடும் கண்டனம் எழுந்து, நடிகர் ரஜினிகாந்த் “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என பதில் கொடுத்த நிலையில், நேற்று இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், பழைய வழக்கை மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal