தமிழ்நாட்டின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில்தான் திடீரென்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது.

விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாட்டில் அ.தி.மு.க.வை விமர்சிக்காத விஜய்! அடுத்தடுத்த பிரச்சாரங்களில் அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார். தவிர, ‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்தில் பங்கு’ என்ற அறிவிப்பையும் அதிரடியாக வெளியிட்டு, திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் விஜய்.

இந்த நிலையில்தான், விஜய்​யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகு​தி​களி​லும் தனித்து களம் காணப்​போவ​தாக தகவல்கள் வெளி​யாகி, தமிழக அரசி​யலில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் மூலம், திரா​விடக் கட்​சி​களின் பலப்​பரிட்​சைக்கு மத்​தி​யில் ‘நான்கு முனைப் போட்​டி’ உறு​தி​யாகி​யுள்​ளது.

விஜய், ஜான் ஆரோக்கிய சாமி….

இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமி​ழ​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. ஆளுங்​கட்​சி​யான திமுக தலை​மை​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, மதி​முக மற்​றும் புதி​தாக இணைந்​துள்ள தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் இருக்​கின்​றன. கடந்த கால கசப்​பு​களை மறந்து மீண்​டும் இணைந்​துள்ள அதி​முக, பாஜக மற்​றும் பாமக உள்​ளிட்ட கட்​சிகள் கைகோர்த்​திருக்​கின்​றன. வழக்​கம் போல் தேர்​தலில் தனித்து நிற்​பது என்ற ஒற்றை இலக்​குடன் சீமான் களம் காண்​கி​றார். இந்த சூழலில் தவெக​வின் ‘தனித்து போட்​டி’ என்ற முடிவு, தமிழக அரசி​யலில் நான்​கு​முனை போட்​டியை உரு​வாக்​கி​யுள்​ளது.

இதற்​கிடை​யில் கடந்த சில நாட்​களாக பாஜக மேலிடம், குறிப்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகின. தமி​ழ​கத்​தில் திமுக-வை வீழ்த்த விஜய்​யின் வாக்கு வங்கி அவசி​யம் என பாஜக கரு​தி​யது. இதற்​காக ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண் மூல​மாக​வும் பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்​ட​தாக தெரிகிறது.

கூட்​ட​ணிக்​குத் தூது வந்​தவர்​களிடம் விஜய் தரப்​பில் வைக்​கப்​பட்ட நிபந்​தனை​கள் அரசி​யல் வட்​டாரத்தை அதிர வைத்​தன. “90 தொகு​தி​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்; இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கப்பட வேண்​டும்” என்ற நிபந்​தனை​களை விஜய் தரப்பு முன்​வைத்​த​தாக தெரிகிறது. இதனை அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி ஏற்க மறுத்​த​தால், கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை முட்​டுக்​கட்​டை​யில் முடிந்​த​தாகத் தெரி​கிறது.

இதை மைய​மாக வைத்து கட்​சிக்​குள் பொதுச் செய​லா​ளர்​களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு இடையே அதி​காரப் போட்டி நிலவி வந்​த​தாகச் செய்​தி​கள் கசிந்​தன. சமீபத்​தில் கட்சி நிர்​வாகி​களு​டன் நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், “என்ன நடந்​தா​லும் வரும் தேர்​தலில் நாம் தனித்து தான் போட்​டி​யிடு​கி​றோம்” எனத் தெள்​ளத்​தெளி​வாகக் கூறிய விஜய், மோதலில் இருந்த நிர்​வாகி​களைச் சமா​தானப்​படுத்தி தேர்​தல் பணி​களை வேகப்​படுத்த உத்​தர​விட்​டுள்​ளார். இருப்​பினும் தொடர்ச்​சி​யாக பாஜக தரப்​பில் கூட்​ட​ணிக்​கான முயற்சி நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதனால் பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டிருக்​கிறது.

த.வெ.க. தனித்துப்போட்டியிட்டாலே 30 முதல் 35 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்திருக்கிறாராம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறிய ஜான் ஆரோக்கியசாமி, ‘அடுத்த முதல்வரை த.வெ.க.தான் தீர்மானிக்கும்’ என ஆணித்தரமாக விஜய்யிடம் அடித்துக் கூறியிருக்கிறாராம். இதனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம் விஜய். இதனால், தமிழகத்தில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal