ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்டார். ஈரான் மக்களுக்கு அவரது அறிக்கை அரசுத் தொலைக்காட்சியில் கடந்த வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில், இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மோஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உள்பட 10 தலைவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, இவர்கள் குறித்து தகவல் அளித்தால் 10 மில்லியன் டாலர் (சுமார் 92.47 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மோஜ்தபா கமேனி அலுவலகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர், புலனாய்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிட்டு நடத்தும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை வழிநடத்தும் நபர்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal