ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 8 முறை அதிமுகவும், முன்று முறை காங்கிரசும், இரண்டு முறை தி-மு.க.வும், தலா ஒருமுறை பா.ம.க. மற்றும் த.மா.க. வெற்றி பெற்றிருக்கிறது.

பவானி தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. 2001, 2016, 2021 ஆகிய மூன்று முறை அ.தி.மு.க. சார்பில் பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பண்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். 2016 முதல் 2021 வரை சுற்று சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

பவானி தொகுதியைப் பொறுத்தளவில் மீண்டும் கே.சி.கருப்பண்ணன்தான் களமிறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மந்தி உறவுமுறை வருகிறது. இவரை எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

இந்தநிலையில்தான் இவரை எதிர்த்து யாரைக் களமிறக்கினால் பவானி தொகுதி தி.மு.க. வசமாகும் என தலைமை உளவுத்துறை மூலம் ரகசிய சர்வே எடுத்திருக்கிறது. அந்த லிஸ்டில் முன்னாள் எம்.பி., என்.ஆர்.கோவிந்தராஜர் முதலிடத்தில் இருக்கிறார். இது பற்றி பவானி தொகுதியில் உள்ள மூத்த உடன்பிறப்புக்களிடம் பேசினோம்.

என்.ஆர்.கோவிந்தராஜர்

‘‘சார், பவானி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. வலுவாக இருக்கிறது. இரண்டு முறை எம்.எல்.ஏ., ஒரு முறை அமைச்சர் என அசுர பலத்துடன் களத்தில் இருக்கிறார் கே.சி.கருப்பண்ணன். இவர் வெங்கடேஸ்வரா என்ற கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவருக்கு ‘டஃப் ஃபைட்’ கொடுக்கக் கூடிய நிலையில் தற்போது இருப்பவர் முன்னாள் எம்.பி., என்.ஆர்.கோவிந்தராஜர்தான். கொங்கு மண்டலத்திலும் சரி, பவானி தொகுதியிலும் சரி மெஜாரிட்டியாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

பவானி தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை தி.மு.க. வேட்பாளராக களமிறக்கினால்தான் அ.தி.மு.க.வுக்கு ‘டஃப்’ கொடுக்க முடியும். இங்கு மெஜாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அனைத்து வகைகளிலும் தகுதியானவர்தான் என்.ஆர்.கோவிந்தராஜர். கடந்த 1977 முதல் 1980 வரை மக்கள் குழுத் தலைவர், 1980 முதல் 1984வரை அம்மாபேட்டை நிலவள வங்கி இயக்குநர், 1992 முதல் 1996 வரை ஈரோடு மாவட்ட ஆவின் இயக்குநர், 2000 முதல் 2004 வரை ஈரோடு மாவட்ட தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் , மாநிலங்களவை மேலவை உறுப்பினர் உள்பட பல்வேறு அரசு பதவிகளை வகித்திருக்கிறார். இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் பரீச்சயமானவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்ற கோவிந்தராஜரை, கோபிசெட்டிப் பாளையத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்துப்போட்டியிட வைத்தார். தேர்தலில் தோல்வியுற்றவுடன், உடனடியாக மாநிலங்களை உறுப்பினர் பதவிக் கொடுத்தார். அந்தளவிற்கு மாவட்டத்தில் அரசியலில் செல்வாக்குடன் வலம் வந்தவர்தான் என்.ஆர்.கோவிந்தராஜர்.

கே.சி.கருப்பண்ணன்

தி.மு.க.வில் இணைந்த பிறகு தற்போது, இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருக்கிறார். முதல்வர் பிறந்தநாளன்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். தி.மு.க.வில் இணைந்தவுடன் உதயநிதியிடம் கட்சிக்கான நிதியையும் கொடுத்தவர் என்.ஆர்.கோவிந்தராஜர். கே.சி.கருப்பண்ணனை எதிர்த்து, என்.ஆர்.கோவிந்தராஜர் அவர்களை களமிறங்கினால் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

காரணம், பவானி தொகுதி அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வில் உள்ள வாக்குகளும் இவருக்கு சரளமாக கிடைக்கும். அந்தளவிற்கு அ.தி.மு.க.வினரும், இவர் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். எனவே, தி.மு.க. தலைமை இந்த முறை பவானி தொகுதியை கைப்பற்ற வேண்டுமென்றால் என்.ஆர்.கோவிந்தராஜர் அவர்களை களமிறக்க வேண்டும். பண பலத்திலும், படை பலத்திலும் கே.சிகருப்பண்ணனுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்.ஆர்.கோவிந்தராஜர்’’ என்றனர்.

பவானி தொகுதியை தி.மு.க. கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal