பாமகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தனித்தனியாகச் செயல்படுகின்றனர். அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. பாமக இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

இந்நிலையில், சசிகலா கடந்த 10ம் திடீரென ராமதாசின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிமுக, திமுக அல்லாத புதிய அணியை உருவாக்குவது குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது.

சசிகலா, ராமதாஸ் இருவரும் கைகோர்ப்பார்களா? இருவருடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘அன்புமணியால் அதிமுகவுக்கும் செல்ல முடியாமல், விசிக எதிர்ப்பால் திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாமல் ராமதாஸ் தரப்பு தவித்து வந்தது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள சசிகலா நினைத்ததார். ராமதாஸுடன் சந்தித்து பேச பாமகவின் முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. பழைய நட்பு மற்றும் அரசியல் கணக்குகளை முன்வைத்து இந்தச் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கோரப்பட்டது.

கடந்த 10ம் தேதி நடந்த ராமதாஸுடனான சந்திப்பில் சசிகலா, உங்களுக்கு அன்புமணியை வீழ்த்த வேண்டும். எனக்கு பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும். எனவே இருவரும் கூட்டணி அமைத்து சிறிய கட்சிகளை அணி திரட்டுவோம் என்றாராம் சசிகலா!

அதற்கு ராமதாஸோ, ‘‘பாமக பலமாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவு இல்லை. உங்களுக்கு செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில் எங்களுக்கு ஆதரவு இல்லை. எனவே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் தென் மாவட்டங்களில் எங்களுக்கு ஓட்டு கிடைக்காது. எனவே இந்த கூட்டணி சரிவருமா?’’ என யோசித்து சொல்வதாக தெரிவித்தாராம். இந்த நிலையில் ராமதாஸ், சசிகலா தரப்பிடம் இந்த கூட்டணி சரிபட்டு வராது என கூறிவிட்டாராம். சசிகலாவின் அரசியல் பயணம் எவ்விதத் தெளிவான இலக்கும் இன்றி இருப்பதாலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் அவரோடு கைகோர்ப்பது கட்சிக்கு எவ்விதப் பலனையும் தராது என்பதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

அதே போல், த.வெ.க. தரப்பும் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லையாம். டாக்டர் ராமதாஸுக்கும், விஜய்யின் ஆரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமிக்கும் ஏற்கனவே கருத்தியல் முரண்பாடுகள் இருப்பதால் விஜய்யிடம் டாக்டர் ராமதாஸ் இணைவதில் சிக்கல் இருக்கிறது’’ என்றனர்.

ஆக மொத்தத்தில், சசிகலாவும், டாக்டர் ராமதாஸும் தனித்துவிடப்பட்டதாகவே கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal