மாநிலங்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில், பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி வைக்கப் போகிறது என்ற தகவல்கள் அரசியல் களத்தல் தீயாய் பரவி வரும் நிலையில்தான், இந்த வதந்‘தீ’யை அனைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது.
‘த.வெ.க. பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்று தி.மு.க. கூறிவருகிறது. அந்த பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் இறங்கி வருகிறாராம் விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் அரோக்கியசாமி. அதாவது, ‘பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்காது’ என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்லி வருகிறாராம் ஜான் ஆரோக்கியசாமி!
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘நடிகர் விஜய்யின் தவெகவை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக மேலிடம் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்குக்கூ உடன்பாடு இல்லாத நிலையில், பா.ஜ.க. எப்படியாவது த.வெ.க.வை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர ஆந்திர தொழிலதிபர் ஒருவர் மூலமாக முயற்சித்து வருகிறது. இதுதான் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தவெகவிற்கு இருக்கும் இளையோர் பலத்தையும், விஜய்யின் மக்கள் செல்வாக்கையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் டெல்லியின் கணக்காக இருக்கிறது. இதற்காக “ஆட்சியில் பங்கு’’ என்ற மெகா ஆஃபரை பாஜக முன்வைத்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ள கருத்துக்கள்தான் பா.ஜ.க. மற்றும் த.வெ.க. கூட்டணிக்கு ‘செக்’ வைத்திருக்கிறது.

ஜான் ஆரோக்கியசாமியின் வாதம் மிகவும் முக்கியமானது மற்றும் அரசியல் முதிர்ச்சி கொண்டது. ஏற்கனவே தவெகவையும் விஜய்யையும் தி.மு.க. ‘பாஜகவின் பி டீம்’ என்று முத்திரையை குத்தி வருகிறது.
இந்நிலையில், இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அந்த விமர்சனத்தை தவெகவே உறுதி செய்தது போல் ஆகிவிடும் என்று எச்சரித்திருக்கிறாராம் ஜான் ஆரோக்கியசாமி. இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கே ஒரு தடையாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். பாஜகவுடன் கைகோர்க்கும் பட்சத்தில், தவெகவின் தனித்துவம் மற்றும் சுயம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் அக்கட்சி பாஜகவின் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக மாறிவிடும் ஆபத்து இருப்பதையும் ஜான் ஆரோக்கியசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உண்மையில், ஒரு புதிய அரசியல் கட்சிக்கு தேவையான மிக முக்கியமான விஷயம் அதன் தனித்துவமான அடையாளமாகும். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது கூட அந்த அளவிற்கு ஒரு நெகட்டிவ் இம்பேக்ட்டை உருவாக்காது, காரணம், அது ஒரு பிராந்தியக் கட்சி!
ஆனால், தேசியக் கட்சியான பாஜகவுடன் இணையும்போது, தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக கட்சி தலைமை முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இது தவெகவின் அடிப்படை தொண்டர்களிடையே கண்டிப்பாக சலசலப்பையே ஏற்படுத்தும், தவிர, தமிழக மக்கள் பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள். இந்த ஒற்றை காரணத்தை வைத்துதான் தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்குள் சென்று சிக்கிக்கொள்கிறது. அந்த வலையில் த.வெ.க.வும் சிக்கிவிடக்கூடாது என்று விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்.
விஜய்யை பொறுத்தவரை, கட்சியின் எதிர்காலத்திற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒரு பாதுகாப்பான விஷயமாகத் தெரிந்தாலும், ஜான் ஆரோக்கியசாமி போன்ற அனுபவம் மிக்க ஆலோசகர்கள் காட்டும் ‘தொலைநோக்குப் பார்வையை’ அவ்வளவு எளில் விஜய்யால் புறந்தள்ளிவிட முடியவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டாலே வழக்கு, விசாரணை என்பது சகஜம்… அதில் இருந்து மீண்டு வருவதுதான் வெற்றிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என்று விஜய்யிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது’’ என்றனர்.
ஜான் ஆரோக்கியசாமியின் வார்த்தைகளுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா? அல்லது பாஜகவின் அதிகாரப் பகிர்வு ஆஃபரை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
