சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி செல்வதற்கு முன்பு, கூட்டணி குறித்து விஜய் தரப்பில் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுக்கப்போகும் அரசியல் முடிவு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைவது குறித்து அக்கட்சி ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளன.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 132 மாவட்டச் செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, மிக முக்கியமான ஒரு கேள்வியும் முன்வைக்கப்பட்டது: ‘‘வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா? குறிப்பாக பாஜகவுடன் கைகோர்க்கலாமா?’’

இந்தக் கேள்விக்கு பதிலளித்த 120 செயலாளர்களில், சுமார் 98 பேர் (80% க்கும் அதிகமானோர்) கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே பலமாக இருக்கும் என்று தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சியின் தலைவர் விஜய் எடுக்கும் எந்த முடிவிற்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டார். இருப்பினும், தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வில் விஜய் தரப்பு வைத்த நிபந்தனைகள் மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைகூடவில்லை என அப்போது தகவல்கள் வெளியானது.
தற்போது தவெகவுக்கு சாதகமான சில சலுகைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெகவுக்கு சுமார் 90 சட்டமன்றத் தொகுதிகளும், அதிமுகவுக்கு 90 சட்டமன்ற தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், இதர 34 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கூட்டணி வெற்றி பெற்றால், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
தேர்தல் தேதி இன்னும் 3 அல்லது 5 நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடைசி நிமிடத்தில் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், வழக்குகளிலிருந்தும் விலக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அரசியலில் நிரந்திர நண்பனும் கிடையாது! நிரந்திர எதிரியும் கிடையாது! என்பார்களே… அது இதுதானோ..?
