‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தன் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் வி.கே.சசிகலா. தேர்தலில் போட்டியிட இந்தக் கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என வைத்துள்ளார். தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகலா புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அந்த பெயரில் ஜெயலலிதாவை தவிர்த்தது ஏனோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவை கைப்பற்றி, கட்டி காப்பார் என பல்வேறு தகவல்கள் உலா வந்தன. ஆனால் தொடர்ந்து மீடியாக்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும் எடப்பாடி மீதான விமர்சனத்தையுமே பேசி வந்தாரே தவிர அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த முயற்சியையும் வெளிப்படையாக எடுத்ததாக தெரியவில்லை.

இதனால் பொறுத்து பொறுத்து இனியும் தாமதம் கூடாது என ஒரு கட்சியை சசிகலா ஆரம்பித்துள்ளார். அந்த கட்சியின் பெயர் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” ஆகும். கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய போது அந்த கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களை பொரித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கட்சியின் பெயரில் ஜெயலலிதா அல்லது புரட்சித் தலைவி என்ற பெயரே இல்லை. வெறும் புரட்சித் தலைவரின் பட்டப் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட சசிகலா, அவரது பெயரை தவிர்த்துவிட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal