எட்டு சதவீத வாக்கு வங்கி கொண்ட இஸ்லாமியர்கள் 12 முதல் 15 அமைப்புகளாக இன்று பிரிந்து இருந்தாலும், அனைவரும் அண்ணா அறிவாலயத்தனை மட்டுமே நம்பி கட்சி நடத்துவதாக புலம்ப துவங்கியுள்ளனர் சில இஸ்லாமிய தலைவர்கள்.
அவர்களின் புலம்பல்கள் உண்மை என்பதைப் போல, தாய்க் கழகம் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் இன்று இரண்டு சீட்டுகளை மட்டுமே பெற்று களத்தில் நிற்கின்றனர்.

தாய்ககழகத்தினை கடுமையாக விமர்சித்து துவக்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜவஹிருல்லாவும் தற்போது திமுகவின் சின்னத்தில் இரண்டு சீட்டுகள் பெறும் முயற்சியில் உள்ளார். அவரிடம் இருந்து பிரிந்த தமீமும் அன்சாரி அதிமுக முகாமிற்கு சென்று தற்போது அண்ணா அறிவாலய வாசலில் முகாமிட்டுள்ளார். அதே போல் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ தற்போது ஒரு சீட்டு கிடைக்குமா என்று திமுகவின் வாசல் கதவை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் பூச்சாண்டி வருது புலி வருது கதையாக பிஜேபி உள்ளே நுழைந்து விடும் என்று சொல்லி சொல்லியே, வேறு வழியில்லாமல் இஸ்லாமியர்கள் திமுகவை ஆதரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கிடையில், திமுக தற்போது இஸ்லாமியர்களுக்கு சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்திடவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தற்போது அமைச்சராக இருக்கும் நாசருக்கு மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு. அதே போல் செஞ்சி மஸ்தானுக்கும் வாய்ப்பில்லை என்று கறாராக தலைமை சொல்லிவிட்டதாக தெரிகிறது.
புதுக்கோட்டையில் முன்னாள் எம்பி அப்துல்லா, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மானின் மகன் ஜீபைர்கான் ஆகியோருக்கு தற்போது சீட்டு உறுதியாக கிடைக்கும் என்று தெரிகிறது. இந்தநிலையில், குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கும், இஸ்லாமியர்களிடமும் நற்பெயரை எடுத்து வரும் விசிக, இஸ்லாமியர்களை கவரும் வகையில் இந்த முறை இரண்டு சீட்டுகள் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தற்போது விசிகவின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆளுர் ஷாநவாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், இவர் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்பே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் குறிப்பாக காயிதே மில்லத் பெயரில் ஆவணப்படம் எடுப்பதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தது. சட்டமன்ற உறுப்பினரான பிறகு, முழு நேர திமுக எம்எல்ஏ போலவே சுற்றி வருவதும் விசிக தலைமை ரசிக்க வில்லை. இருந்த போதும் அவருக்கு தற்போது சீட்டு கொடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பல அமைப்புகளாக இன்று இருக்கும் இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து இன்று அதிக அளவில் அந்த சமுகத்தை சார்ந்தவர்களை இணைந்து வருகின்றனர். இதற்கு முழு காரணமாக இருக்கும் அப்துல் ரஹ்மானுக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்ற குரல் கட்சியினர் மத்தியிலும், சமுதாய மக்களின் மத்தியிலும் இன்று அந்த கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
விசிக தலைவர் திருமாவின் செயல்பாடுகள், குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளாக இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது ஆகியவை சமுதாயத்தினர் விசிகவின் பக்கம் திரும்ப ஆரம்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், கட்சியில் இஸ்லாமியர்களை தக்கவைத்துக் கொள்ளவும், தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களுக்கான கட்சியாக மாற்றவும் இந்த முறை இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடத்தினை ஒதுக்கி முன்மாதிரியாக இருக்க விசிக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அப்துல் ரஹ்மானுக்கும், விருப்பமில்லை என்றாலும், ஆளுர் ஷாநவாசுக்கும் இந்த முறை சீட்டு ஒதுக்க விசிக முடிவெடுத்துள்ளது.
ஒருவேளை ஆளுர் ஷாநவாஸ்க்கு மீண்டும் சீட்டு கொடுக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டால், அதே சமுதாயத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்க தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல குழுக்களாக இருக்கும் இஸ்லாமியர்கள் விடுதலை சிறுத்தைகள் என்றும் அரணாக இருக்கும் என்பது நிருபணமாகும் என்று கணக்கு போடுகிறார்கள் விசிகவினர்.
எது எப்படியோ, அரசியல் களத்தில் இஸ்லாமியர்கள் அந்தரத்தில் தொங்குகிறார்கள் என்பதுதான் உண்மை!
