காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தின் மீது இன்று காலையில் சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது எம்பி அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் எம்பி அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அலுவலகம் அருகே வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு அலுவலகத்தின் முன்புறம் உள்ள முற்றத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு எஸ்கேப்பானது. இதுபற்றி உடனடியாக காரைக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரைக்குடி போலீசார் மற்றும் எஸ்பி சிவபிரசாத் நேரில் சென்று விசாரணையை தொடங்கினர்.

பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தி.மு.க.வுடன்தன் கூட்டணி வைக்க வேண்டும் என உறுதியாக இருந்த கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
