கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கட்சி பணிகள் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து தான் தற்போது வரும் 15 ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக பிரசாரம், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பினை நடத்தி வந்தார் விஜய். அந்த வகையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தினை நடத்தினார்.

இந்த கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில், பிஞ்சு குழந்தைகள் உள்பட 41 பேர் உடல்நசுங்கி பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக விஜய்யின் செயல்பாடுகள் குறித்து சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியிருந்தது. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிபிஐ விசாரணையின் போதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தான் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் நேரில் ஆஜர் ஆகி விஜய் விளக்கம் அழித்தார். அன்றைய நாளில் 7 மணி நேரம் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் பொங்கல் கழித்து மீண்டும் ஒரு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகினார். இதையடுத்து நேற்று விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியது. கரூர் வழக்கு விசாரணை தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது.

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்யை இணைக்கவே, சிபிஐ விசாரணையை மத்திய அரசு பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும் விஜய் இன்று வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதாக கூறியிருந்ததால் இன்று நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு கேட்டு இருந்ததாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.

இதனை சிபிஐ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து தான் தற்போது மீண்டும் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. நேர்காணல் நடந்து வருவதால் 15 நாட்கள் அவகாசம் கேட்டார் விஜய். தவிர, சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாணை நடத்துமாறும் கோரினார். விஜய்யின் இரண்டு கோரிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் முடிந்து ஒன்றரை மாதம் கழித்து, தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் சமயத்தில் விஜய் விவகாரத்தில் சி.பி.ஐ. வேகமெடுத்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

த.வெ.க. தலைவர் விஜய் வளைந்து கொடுப்பாரா? நிமிர்ந்து நிற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal