தவெக கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே அய்யாச்சாமிபட்டியில் மார்ச் 4-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்க திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த, திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான விக்னேஷ்(19), அவரது நண்பர் ஷாரூன்(19) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கினர்.
இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஷாரூனை நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், “தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர்கள் இருவரையும் தவெக நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறாத நிலையில், தமிழக அமைச்சரும், எம்.பி.யும் மருத்துவமனைக்கு சென்று மாணவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மருத்துவ செலவுகளை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்” என்ற தகவல் சமூகவலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே, கரூர் துயரச் சம்பவத்தை யாரும் மறக்காத நிலையில், மீண்டும் விபத்தில் இளைஞர்கள் சிக்கிய சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
