டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் இரண்டு புதிய சரித்திரங்கள் படைக்கப்படும். ஒன்று, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் நாடு. மற்றொன்று, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும்.
2023இல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த பிட்ச், இம்முறை களிமண் மற்றும் செம்மண் கலந்து தயார் செய்யப்பட்டுள்ளதால், 200 ரன்களுக்கு மேல் குவிய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 2023இன் கசப்பான நினைவுகள் திரும்பக்கூடாது என்பதற்காக, இந்திய அணி இம்முறை புதிய ஹோட்டலில் தங்கியுள்ளது. சந்திர கிரகணப் பயிற்சியைத் தவிர்த்து, முழு முனைப்புடன் களமிறங்கும் இந்தியா, டி20 உலகக்கோப்பையை அதிக முறை வென்ற நாடு என்ற சாதனையை படைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
