சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆனந்தபோஸுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் ராஜினாமா செய்தது சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘ஆளுநர் ஆனந்தபோஸின் ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக, தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இப்போதுதான் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசியல மைப்பின் மாண்பை சீர்குலைப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதாக உள்ளன. மாநிலங்களின் கவுரவத்தை சீர்குலைக்கும் தன்னிச்சையான முடிவுகளில் இருந்து மத்திய அரசு விலகியிருக்க வேண்டும்’’ இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கர், தமிழக மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal