‘2026ல் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி?’ என எங்கு சென்றாலும் சொல்லி வருகிறார் விஜய். தமிழகம் முழுவதும் இந்த நிலைமை இல்லை என்றாலும் கோபி செட்டிப் பாளையம் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர். இந்த நிலையில்தான் கே.ஏ.செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்து இரு கழகங்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அதிமுகவில் 50 வருட காலங்கள் செயல்பட்டு வந்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் செல்வாக்கு மதிப்பு கொண்டவர்.கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருப்பவர் இவர். எம்ஜிஆரின் ரசிகர் மன்ற துவங்கி அதன்பின் எம்.ஜி.ஆரால் சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் இவர். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரிடமும் அரசியல் கற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என இவர் பேசியது பிடிக்காததால் இவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவிலிருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். அந்த கட்சியில் சேர்ந்த 20 நாட்களிலேயே ஈரோட்டில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி காட்டியிருக்கிறார் செங்கோட்டையன். விஜயை அழைத்து சென்று சொந்த மண்ணான ஈரோட்டில் பிரமாண்டத்தை காட்டியிருக்கிறார் செங்கோட்டையன். ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சியான அதிமுகவுக்கும் தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தின் செல்வாக்கை காட்டவே செங்கோட்டையன் இதை செய்திருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதற்கிடையே கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் செங்கோட்டையனை எப்படியாவது வீழ்த்திய ஆகவேண்டும் என கணக்குப் போட்டு அ.தி.மு.க. வேலை பார்த்து வருகிறது. கோபியில் செங்கோட்டையனை எதிர்த்து ஒரு தரமான வேட்பாளரை களத்தில் இறங்க அ.தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.

தி.மு.க. சார்பில் கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் போட்டியிட சிந்து ரவிச்சந்திரன் அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். தி.மு.க.வில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் சிந்து ரவிச்சந்திரனுக்கு கோபி செட்டிப் பாளையத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். காரணம், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான சிந்து ரவிச்சந்திரன் கோபியில் உள்ள மக்களுக்கு நல்ல பரீட்சயமானவர். இப்பகுதியில் உள்ள அனைத்து நல்லது, கெட்டதுகளிலும் கலந்துகொள்ளக் கூடியவர், நர்சிங் கல்லூரி, சட்டக்கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்.

கடந்த காலங்களில் கே.ஏ.செங்கோட்டையனின் நிழலாக வலம் வந்த சிந்து ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அவர் செங்கோட்டையனை வீழ்த்துவார் என்கிறார்கள். காரணம் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வை மிகவும் பலமாக வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். எனவே, செந்தில் பாலாஜியின் களப்பணியே, சிந்து ரவிச்சந்திரனை கரைசேர்க்கும் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்!

ஆக மொத்தத்தில் கோபி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டியே என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal