திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமார் நேற்று அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு முறையாக தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. மூன்றாவது முறையாகவும் தி.மு.க. வெற்றி பெறும் என அடித்துக் கூறுகிறார்கள் உடன் பிறப்புக்கள்!

எஸ்.அருண்குமார்

இது பற்றி துறையூர் தொகுதியில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இரண்டு முறை தி.மு.க. வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்டாலின் குமார். இவர் மீது எந்தவிதமான ஒரு குற்றச்சாட்டையும் வைத்துவிட முடியாது. மிகவும் எளிமையாக இருக்கக்கூடிய ஸ்டாலின் குமார் தொகுதியை சிறப்பாக வைத்திருக்கிறார்.

அதே சமயம், துறையூர் தொகுதி முன்பு உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. அதனால், இந்தமுறை உப்பிலியபுரம் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துள்ளது. இந்த விருப்பத்தை அமைச்சர் கே.என்.நேருவிடமும் தெரிவித்திருக்கிறார்கள். உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரத்தைச் சேர்ந்த எஸ்.அருண்குமார் என்பவர் நேற்று மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவுடன் வந்து துறையூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருக்கிறார்.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 38 வயது இளைஞரான அருண்குமார் (எம்.ஏ., எம்.எட், எம்.ஃபில், எம்ஃபில், எம்.எஸ்.சி. (சைகாலஜி) 16 வருடம் உதவிப் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, பணியை ராஜினாமா செய்துவிட்டு (தி.மு.க.) கட்சிப் பணியாற்றி வருகிறார். எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத அருண்குமாருக்கு தொகுதி முழுவதும் நல்லபெயர் உண்டு!

தனி தொகுதியான துறையூர் தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய முழு ஆதரவும் அருண்குமாருக்கு இருக்கிறது. எனவே, இந்த முறை உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான அருண்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தால், துறையூர் தொகுதியில் தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றனர்.

தி.மு.க. தலைமையின் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal