தி.மு.க., காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சு வார்த்தையில், கடந்த முறை போல் 25 தொகுதிகள் ஒதுக்கப்படும். ராஜ்யசபா சீட் கேட்டால் 20 + 1 கொடுக்கப்படும். ‘உங்கள் முடிவை செவ்வாய்க்கிழமைக்குள் சொல்லுங்கள்’ என காங்கிரசிடம் தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கான கெடுவும் இன்று மாலையுடன் முடிகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி காங்கிரஸ் திட்டம் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் எம்பி செல்லக்குமார் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் தலைவராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதால் இந்த முடிவு எடுக்கப்படாலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னாள் எம்.பி., செல்லக்குமார்

தமிழக அரசியல் களம் தற்போது கோடை காலத்திற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சத்தியமூர்த்தி பவனில் அடிக்கும் காற்று, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சாதகமாக இல்லை என்றே தெரிகிறது. தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதல், அவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற விமர்சனம் கட்சிக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது. “கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால் அதற்காக காங்கிரஸின் தனித்தன்மையை திமுகவிடம் அடகு வைக்கலாமா?“ என சத்தியமூர்த்தி பவனின் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு ரகசிய ரிப்போர்ட்களை தட்டிவிட்டனர்.

இதற்கிடையே த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், தமிழக காங்கிரஸ் இரண்டாக உடையும் ஆபத்து இருப்பதால், டெல்லி தலைவர்கள் நேரடியாக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையேதான் சோனியா அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஸ்டாலினிடம் நேரடியாக சந்தித்து பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal