அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும் மார்ச் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நபராக கடந்த ஆண்டே பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர், 3 கட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆனால், கூட்டணி முழு வடிவம் பெற்றுள்ள நிலையில் இன்னும் தொகுதிப் பங்கீட்டை தொடங்கவில்லை.
இதற்கிடையில், மதுரையில் கடந்த ஞாயிறு நடைபெற்ற தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தின் முடிவில், கூட்டணி தலைவர்கள் கூட்டம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், பழனிசாமி முன்னிலையில் அன்று இரவு நடைபெற்றது. அதில் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொகுதி பங்கீட்டை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்தாலோசித்து இறுதி செய்வதற்காக பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
பின்னர் நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவி, ஜி.கே.வாசனுக்கா, அன்புமணிக்கா என்பது குறித்தும் விவாதித்தனர். பின்னர், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் ஒன்றையும் அமித் ஷாவிடம் பழனிசாமி வழங்கியதாகவும், இவர்களை தேர்தல் பணியில் ஈடுபடாத துறைக்கு இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யப்பட்ட பட்டியல் குறித்து, அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி, நாளை மாலை சென்னையில் ஆலோசிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 6-ம் தேதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியல் அமித் ஷா முன்னிலையில் இறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
அடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு எம்.பி. பதவி வழங்குவது என 4-ம் தேதி (நாளை) அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
