தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. எனவே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி கட்சிகளிடையே நிலவுகின்றன.

முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இதை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மறுத்தார்.

அ.தி.மு.க & பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

‘‘ சார், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நாங்களே தொகுதிகளை பங்கிட்டு கொடுக்கிறோம். நீங்கள் மொத்தமாக தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என பாஜக கேட்டு வருகிறது. எனினும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மதுரையில் என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி தேர்தல் வியூகங்கள் குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஏசி.சண்முகம், பாரிவேந்தர், ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.இதையடுத்து நேற்று இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டம் தொடர்பாக பேட்டியளித்த பியூஸ் கோயல், ‘‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினோம்’’ எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வருகைக்கு முன்பே, என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி 2 முறை தமிழகம் வந்த பின்னும் இன்னும் தொகுதிப் பங்கீடு நிறைவடையாததால் அமித்ஷா அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியை அவர் டெல்லிக்கு அழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றும், கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனி அணியாக நின்று 18 சதவீதம் வரை வாக்குகளை பெற்றதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளை கேட்கிறது பாஜக. தங்கள் பக்கம் உள்ள நியாயத்தையும் எடுத்துக்கூறி, இன்றைக்கே தொகுதி பங்கீட்டில் ஒரு முடிவு எட்டப்பட வாய்ப்பும் இருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal