திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (பிப்ரவரி 27) திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக-வில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். 75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 முதல் அதிமுக-வில் இருந்தவர். அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.

இதற்கு நடுவே மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போதே சர்ச்சைகள் வெடித்ததால் சிறிது காலம் அமைதிகாத்தவர், அண்மையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததுடன், “ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது; மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும்” எனப் பேட்டியும் கொடுத்தார் ஓபிஎஸ். அவரது ஆதரவு எம்எல்ஏ-வான உசிலம்பட்டி ஐயப்பனும், “ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டும்” எனச் சட்டமன்றத்தில் வாழ்த்தி முழங்கினார்.

தி.மு.க.வில் இணைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘கடந்த 5 ஆண்டுகளாக அண்ணா காட்டிய வழியில், கலைஞரைப் பின்பற்றி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தக்கொண்டிருக்கிறார் தளபதி. அதனால்தான், தி.மு.க.வில் நான் இணைந்தேன். அரசியலில் ஆணவத்தோடு சரிவாதிகாரி போல் நடந்துகொள்ளும் எடப்பாடி இனி எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

அம்மாவின் மறைவிற்குப் பின்னால், இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தளபதியை ஏற்றுக்கொண்டு தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்கள். எனவே, இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்காது’’ என்றார் ஓ.பி.எஸ்.

கால்நூற்றாண்டுக்கு மேல் அ.தி.மு.க.வில் கோலோச்சிய ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து அ.தி.மு.க.விற்கும், அமித் ஷாவுக்கும் ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal