வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்பமனு பெறப்படும் நிலையில், போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பார்ப்போம்..!
துறையூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதியாகும். இது ‘தனி’ தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செ. ஸ்டாலின் குமார் 87,786 வாக்குகள் (49.91%) பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தி. இந்திராகாந்தி 65,715 வாக்குகள் (37.36%) பெற்று இரண்டாம் இடம். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வி 13,158 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம். வெற்றி வித்தியாசம் சுமார் 22,071 வாக்குகள். மொத்த வாக்குப்பதிவு 80.52%. தற்போது (2026 நிலவரம்) செ. ஸ்டாலின் குமார் எம்எல்ஏவாக உள்ளார். 2026 தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக,நாதக போன்ற கட்சிகள் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி துறையூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஸ்டாலின் குமார் மீண்டும் துறையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். துறையூர் திமுக மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சரண்யா மோகன்தாஸும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அடுத்து, உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ப.அசோக்ராஜும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார். இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறார்.
துறையூர் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், தொகுதி நிலவரம் குறித்து நடுநிலையான உடன்பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், முன்பு உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதியாக இருந்ததுதான், தற்போது துறையூர் தொகுதியாக மாறி இருக்கிறது. ஏற்கனவே ஸ்டாலின் குமார் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். மூன்றாவது முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருக்கிறார்.

அடுத்தது, உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ப.அசோக் ராஜும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார். துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நான்றாக இருக்கும் என உடன்பிறப்புக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். காரணம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவருக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது.
உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அசோக்ராஜுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் இருக்கிறது. தவிர, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி., அருண் நேரு ஆகியோர் ‘குட்புக்’கிலும் இருக்கிறார். எனவே, இவரும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்’’ என்றனர்.
துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் அமைச்சர் கே.என்.நேரு கைகாட்டுபவரும், முதல்வரின் மாப்பிள்ளை நடத்தும் ‘பென்’ அமைப்பும்தான் வேட்பாளரை முடிவு செய்யும். யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
