நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் இலவச மின்சாரம் வழங்குகின்றன. மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தைப் பெறுகிறார்கள்’’ என அவர் கருத்து தெரிவித்தார். இலவச திட்டங்களால் நாடு வளர்ச்சி பெறாது என குறிப்பிட்டார்.

இந்த நிலையில்தான், ‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், ‘தேர்தல் முடிந்த பிறகு மனுவை விசாரிக்கலாம்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்னர் இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போது இந்த மனுவை விசாரிக்க அவசரம் இல்லை, தேர்தலுக்கு பின்னர் விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுபோன்ற அறிவிப்புகளைத் தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும் என்றும், இலவசத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின் இந்த வழக்கை விசாரிக்கலாம். கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் இதுப்போன்ற மனுவை தொடர்ந்தார்கள். தற்போது இந்த வழக்கை விசாரிக்க அவசரம் தேவையில்லை என தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுதான் அரசியல் கட்சித் தலைவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருப்பதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் இலவச வாக்குறுதிகள் அள்ளி வீசப்படலாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal