தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளதால், சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு “27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகளுக்கான காலத்தில், 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026-ன் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில், தமிழகத்தில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925, பெண் வாக்காளர்கள் – 2,89,60,838 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,617 நபர்கள் உள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத் திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+ வயதினர்) 3.99 லட்சம் ஆகும்.
மேலும், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116).
இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 6-ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75) உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55).
இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16-எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879ஆவர் (ஆண்கள் 65,677, பெண்கள் 69,149: மூன்றாம் பாலினத்தவர் 53).
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 பிரிவு 24(a) மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960-இன் விதி 27 இன் கீழ் 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
முதல் மேல்முறையீட்டு தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். 1950 பிரிவு 24(b) மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960-இன் விதி 27-ன்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையானால் பெயர் சேர்க்க (படிவம்-6), திருத்தம் (படிவம்-8) அல்லது நீக்கம் (படிவம்-7) செய்வதற்கான விண்ணப்பங்களை இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
18-19 வயதுக்குட்பட்ட முதல் முறையாக வாக்காளர்களாக பதிவு செய்தவர்களுக்கும், திருத்தங்களுக்கு விண்ணப்பித்த அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும்.
தொடர் திருத்தக் காலம், 23.02.2026 முதல் நடைமுறையில் உள்ளது. 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாத அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் பின்வரும் வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
- வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
- இணையம் மூலமாக https://voters.eci.gov.in/என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
- கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘Voter Helpline App’ செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
- பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை ‘1950’ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
