‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கு நடக்கும் போர்… தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்ச லாவன்யத்திற்கும் நடக்கும் போர்… இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் சாருக்கும், விஜய்க்கும் நடக்கும் போர்’ என கர்ஜித்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 23ம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரி பகுதியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதற்கெனெ சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சுமார் 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அசம்பாவிதங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை வேலூரில் நிர்வாகிகள் அமரும் இடம் முழுவதும் நிழல் தரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு, க்யூஆர் குறியீடுடன் கூடிய சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிச் சீட்டு இல்லாத நபர்களுக்கு மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

காவல்துறை விதித்துள்ள 20-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காகக் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவில்லை. சரியாக திட்டமிட்டபடி 12 மணிக்கு விஜய் மேடைக்கு வந்தார்.. நிர்வாகிகளிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. மேடையில் பேசும்போது வழக்கம்போல் திமுக அரசை கடுமையாக சாடினார்.. பிறகு விசில் சின்னத்துக்கே ஓட்டு என்று உறுதிமொழி தந்த விஜய், குட்டிக் கதையோடு தன்னுடைய சுவாரஸ்ய பேச்சை ஆரம்பித்தார்.

அப்போது பேசிய விஜய், ‘‘ஒரு பெரிய ரோடு. பரபரப்பான பகுதி. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. அந்த சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு, காலில் மண்ணை சீறி நின்று கொண்டிருந்தது. யாரும் அருகில் செல்ல முடியவில்லை. யாராவது அதை அடக்கினால் தான் அருகில் செல்ல முடியும். அந்த ஊரில் உள்ள ஒருவர் தான் அடக்க முடியும். அவரும் அப்போது ஊரில் இல்லை.

கூட்டத்தில் இருந்த சிலர் நாங்கள் பார்க்காத காளையா என்று அதை அடக்க முயற்சித்தனர். ஒருவராலும் காளையை அடக்க முடியவில்லை. காளை அவர்கள் அனைவரையும் அடித்து வீசியது. கடைசியாக ஒரு சின்ன பையன் காளையை அடக்க சென்றான். அவனை கூட்டத்தில் இருந்த பெரியவர்கள், எங்களாலேயே முடியவில்லை. உனக்கு ஏன் இந்த வேலை. காளையிடம் தனியாக மாட்டிக் கொள்ளாதே என பரிதாபப்ட்டார்கள். அந்த சின்ன பையன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு கெத்தாக சென்றான். அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். காளை அவனை நோக்கி வேமாக வந்தது. காளை அருகில் வந்தவுடன் அவன் ஒரு புல்லு கட்டை எடுத்து நீட்டினான். காளை ஆக்ரோஷத்தை கைவிட்டு அமைதியாக சாப்பிட்டது. அந்த பையன் காளையை அப்படியே அருகில் உள்ள புல் காட்டிற்கு அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விட்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்தான்.

அடிபட்டுகிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்க போட்டனர். பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நச நச என்று பேசினார்கள். எப்படிப்பா அந்த காளையை அடக்கினே என்று அந்த பையனிடம் ஒரு பெரியவர் கேட்டார். எனக்கு அந்த காளை கோபமாக இருந்ததாக தெரியவில்லை. பசியாக இருந்த மாதிரி தெரிந்தது. அதனால் புல்லு கட்டை நீட்டினேன் என்றான். பெரியவர், அனுபவசாலி, சிறியவர் என்று யாராக இருந்தாலும் என்ன செய்து அந்த பிரச்சனையை சரி செய்கிறார்கள் என்பதுதான் மேட்டர். நீ சூப்பருப்பா என்று அந்த பையனை பெரியவர் பாராட்டினார். அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாடு அரசியல் களம். அந்த பெரியவர்கள் தமிழ்நாடு மக்கள். பாக்கெட்டிற்குள் கெத்தாக வலம் வந்தது நம் தவெக. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal