சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று இரவு சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக -பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவித்தது. அதன்படி நேற்று திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்.

முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய கே.சி.வேணுகோபால் ராவ், ‘அனைத்தையும் பொறுத்திருந்து பாருங்கள்’ என செய்தியாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றார். இதன்பின் நேற்று இரவு தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இன்று காலை கே.சி.வேணுகோபால் ராவ் சென்னை விமான நிலையத்திலிருந்து கொச்சி புறப்பட்டார்.

அப்போது, ‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்படிச் சென்றது? மகிழ்ச்சியா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கே.சி.வேணுகோபால் எதுவும் பேசாமல், செய்தியாளரை நோக்கி கையெடுத்து கும்பிட்டு விட்டு புறப்பட்டார். மேலும் இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த முதற்கட்ட சந்திப்பில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சித்தரஞ்சன் வீட்டில் பேசியது பற்றி ஸ்டாலிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், இந்தப் பேச்சு வார்தையின் போது மு.க.ஸ்டாலின், கனிமொழி, வேணுகோபால் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. ஸ்டாலின் வீட்டில் இரவு உணவை உண்டுகொண்டே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் வேணுகோபால், அப்போது ராகுல் காந்தியிடமும் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தவிர, சோனியாகாந்தியிடம் இருந்து வாங்கிவந்த சீல் உடைக்கப்படாத ஒரு கவரையும் ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்த ஸ்டாலின் ‘முடிவை அப்புறம்’ சொல்கிறேன் என்றாராம்.காரணம், ஒரு ராஜ்யசபா சீட் உள்பட 40 தொகுதிகள் வேண்டும் என சோனியாகாந்தி தெரிவித்திருக்கிறாராம். அதே சமயம், தி.மு.க. மற்றும் காங்கிரசின் உறவு முக்கியத்தவம் பற்றியும் அந்தக் கடிதத்தில் தெளிவு படுத்தியிருக்கிறாராம். இதனைப் பார்த்துவிட்டுதான் பிறகு சொல்கிறேன் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal