தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைமை கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்டு’க்காக காய் நகர்த்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாருக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஜூனியர் ஒருவர் சீனியர் நிர்வாகிகளுக்கு ‘டஃப்’ கொடுத்து வருகிறார் என்பதுதான் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

இது பற்றி துறையூர் ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், துறையூர் சட்டமன்றத் தொகுதி (தனி) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியத் தொகுதியாகும். இது 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின், பட்டியலினத்தவருக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாக மாறியது. துறையூர் நகராட்சி மற்றும் உப்பிலியாபுரம், துறையூர் ஒன்றியங்கள் இதன் கீழ் வருகின்றன. இது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள சட்டசபை தொகுதியாகும்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் துறையூர் தொகுதிக்காக பலர் காய் நகர்த்தினாலும் ரேஸில் இருப்பவர்கள் என்னவோ அறிவழகன் விஜய், முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி, பொறியியல் பட்டதாரியான தீனதயாளன் ஆகிய மூவர்தான். அறிவழகன் விஜய்யைப் பொறுத்தளவில் தொடர்ந்து ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தலைமையும் அவருக்குத்தான் சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது

அதே சமயம், 2011ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் இந்திராகாந்தி. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். துறையூர் தொகுதி மக்களிடயே நன்கு பரீச்சயமானவர். உப்பிலியபுரம் தொகுதியில் வாக்குகள் குறைந்ததால் இவர் கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதற்கு கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளும் ஒரு காரணம்! இவரும் மீண்டும் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்ட உயர் அதிகாரிகள் சிலரும் இவருக்காக சிபாரில் இறங்கியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, துறையூர் தொகுதியை குறி வைத்து பலர் காய் நகர்த்தினாலும், சீனியர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் பொறியியல் பட்டதாரியான கே.தீனதயாளன். இளைஞரான இவர் 21வது துறையூர் நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். இவரது தாயார் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தந்தை முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும், நான்கு முறை துறையூர் நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

தீனதயாளனின் தாயார் தேவேந்திரகுல வேளாளர் முதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இவரது தந்தை ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் இரு சமுதாய வாக்குகளும் இவருக்கு அப்படியே விழும் என்கிறார்கள். தீனதயாளனுக்கு இது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம்!

சமீபத்தில் துறையூர் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, ஆம்புலன்ஸ் நுழைந்ததை துணிச்சலுடன் தட்டிக்கேட்டவர்தான் தீனதயாளன். இதற்காக இவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. இவரும் தனக்கு சீட் வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தின் மூலம் துறையூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார். கடைசி நேரத்தில் இந்த மூவரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

தி.மு.க.வில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில், துறையூர் அதிமுகவில் இளைஞரான பொறியியல் பட்டாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal