கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார்.
டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 22ம் தேதியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் ஏற்கெனவே திமுக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் குழு அமைத்திருக்கிறது. குழுவின் தலைவராக கழக பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டிருக்கிறார். குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் கனிமொழி பெயர் ‘மிஸ்’ ஆகியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
