மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து பல மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தும், ‘அழைப்பு’ விடுக்காததால், ‘அஞ்சா நெஞ்சனின்’ ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘கலைஞர் கருணாநிதி காலத்தில் டெல்லிக்கு முரசொலி மாறன், சென்னைக்கு மு க ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என்றுதான் இருந்தது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அதற்குத்தான் அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. சென்னையில் பிறந்து வளர்ந்த அழகிரி மதுரை அரசியலை நிரந்தரமாக்கிக் கொண்டார்.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் அவருக்கு பெரிய ஆதரவாளர் வட்டம் இருந்தது. இதற்கிடையே கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். இடையில் நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் முக அழகிரி.
அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களான மன்னன், இசக்கி முத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பேரணியை நடத்தி காட்டினார் அழகிரி. திமுக ஆட்சி அமைந்த போதும் அவருக்கு கட்சி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சகோதரர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும், மதுரை செல்லும் போதெல்லாம் உதயநிதி ஸ்டாலின் முக அழகிரி சந்திப்பதும் வழக்கமாகி வந்தது.
இதற்கிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் திமுக அனுதாபிகளாகவே தாங்கள் தொடர்வதாகவும் தங்களை திமுகவின் சேர்த்து கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென சமீபத்தில் மதுரை சென்ற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார் மன்னன். இருந்த போதும் தற்போது வரை அவருக்கு கட்சிப் பணியாற்ற சிக்னல் கிடைக்கவில்லை. திமுகவின் அடுத்த தலைவர் ஒருவர் அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை அரசியலில் பரபரப்பு திருப்பமாக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவின் பரம எதிரி கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திமுக தரப்பில் இருந்து எந்த விதமான பச்சை சிக்னலும் கிடைக்காத நிலையில் குட்டி குழந்தை கட்சியான தவெகவுக்கு செல்ல சீனியர்கள் சிலர் விரும்பவில்லை. இதை அடுத்து அதிமுகவுக்கு செல்லலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை லோக்கல் புள்ளிகளின் தயவு இல்லாமல் சில தொழில் ரீதியான நட்புகள் மூலம் அதிமுக தலைமையுடனேயே நேரடியாக அவர்கள் பேசியதாக சொல்லப்படுகிறது. கட்சிக்கு வந்தால் நிச்சயம் உரிய முக்கியத்துவமும் பதவியும் வழங்கப்படும் என அதிமுக தலைமை உறுதி அளித்த நிலையில், அவர்கள் விரைவில் அதிமுகவில் ஐக்கியம் ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் யார்? யார்? அதில் சேரப் போகிறார்கள். எப்போது இந்த விழா நடக்கும் என்பது விரைவில் தெரியவரும்’’ என்றனர்.
