தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து, தி.மு.க. சார்பில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தத் தொகுதியில் களம் காணும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அளித்துள்ள தகவல்களின்படி, விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் போட்டியைச் சென்னை வேளச்சேரி தொகுதியிலிருந்து தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

விஜய் தனது அரசியல் அறிமுகத்தை ஒரு கிராமப்புறத் தொகுதியிலிருந்து தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேளச்சேரியைத் தேர்வு செய்திருப்பது ஒரு அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் பல்வேறு சுவாரசியமான காரணங்கள் உள்ளன.
அதாவது, விஜய்யின் பனையூர் இல்லத்திற்கு மிக அருகில் வேளச்சேரி அமைந்துள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் இது அவருக்குப் பெரும் வசதியாக இருக்கும். வேளச்சேரி தொகுதியில் மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் உள்ளனர். விஜய்யின் ரசிகர் பட்டாளமும், அவரது அரசியல் மீதான ஈர்ப்பும் இந்தத் தரப்பினரிடையே அதிகமாக இருப்பதால், இது ஒரு பாதுகாப்பான மற்றும் வலிமையான களமாகத் தேர்கிறது.
கடந்த 2021 தேர்தலின் போது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேளச்சேரியில் 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. புதிய கட்சிகள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் இங்கு அதிகம் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
விஜய்யின் பெயர் (Vijay), அவரது கட்சியின் பெயர் (Tamizhaga Vettri Kazhaga) என இரண்டுமே ‘V’ என்ற எழுத்தில் தொடங்குவதால், அவர் போட்டியிடும் தொகுதியும் ‘V’ எழுத்தில் தொடங்க வேண்டும் என ஜோதிட ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக விருத்தாசலம், விக்கிரவாண்டி மற்றும் விருகம்பாக்கம் போன்ற தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டாலும், இறுதியில் வேளச்சேரிக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில்தான், தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளரும், உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கை நட்சத்திரமான தூத்துக்குடி எஸ்.ஜோயல் வேளச்சேரி தொகுதியில் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி உதயநிதி ஸ்டாலின் என்ன நினைக்கிறாரோ அதை செய்துகாட்டக் கூடியவர்தான் எஸ்.ஜோயல். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்தான் எஸ்.ஜோயல். உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கிறார்!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என தலைமையிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினின் கண் அசைவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்.ஜோயலை வேளச்சேரி தொகுதியில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி. எனவே, விஜய்க்கு எதிராக டஃப் ஃபைட் கொடுக்கக்கூடியவர் எஸ்.ஜோயல்தான். தற்போது, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் செல்லுத்தியிருப்பதால், தி.மு.க.வின் வெற்றிக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும் ’’ என்றனர்.
ஆக மொத்தத்தில், விஜய்யை எதிர்த்து வேளச்சேரி தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் எஸ்.ஜோயல்!
