திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சி மங்கப்பட்டியில் சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ‘பாவம்’ ஒருபக்கமும், ‘பழி’ ஒரு பக்கமும் விழுந்திருப்பதாக கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.

போராட்டத்தில் பொதுமக்கள்….

இந்த விவகாரம் குறித்து உப்பிலியபுரம் ஒன்றிய உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் பலமுறை சொல்லிவிட்டோம். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் ஒன்றியச் செயலளார்களின் தலையீடு அதிகமாக இருந்தது. தவிர இவரது ஆதரவாளர்கள் மறைமுக வசூல் வேட்டையில் இறங்கி பயனாளிகள் சிலரை ‘உள்ளே நுழைத்தது’தான் முறைகேட்டுக்கு காரணம். இந்த வீடு மலை அடிவாரத்தில் கட்டப்பட்டிருந்தது. இதற்காக மலைகளை குடைந்து சமப்படுத்தியபோது, எடுத்த கனிம வளங்களை விற்று பல லட்சத்தை லாபம் பார்த்தனர். வீடுகட்டியதில் டெண்டர் வேலைகளையும் பினாமி பெயர்களில் எடுத்து லாபம் பார்த்தனர்.

ஆனால், வீடு, நிலபுலம் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது கலெக்டர் எடுத்த நடவடிக்கையில் இருந்தே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். எந்தவொரு ‘ஒதுக்கீடு’ விஷயத்திலும் ‘அரசியல் தலையீடு’ இருக்கும் என்பதுதான் யதார்த்தம். ஆனால், அந்த ‘அரசியல் தலையீடு’ உப்பிலியபுரத்தில் நடுநிலையாக இல்லை என்பதுதான் உடன் பிறப்புக்களின் புலம்பல்களாக இருக்கிறது. உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக ‘முத்து’ குளித்து வருபவர் கம்பி எண்ணும் காலமும் வெகு தொலைவில் இல்லை’’ என்றனர் ஆதங்கத்துடன்.

திருச்சி மாவட்டத்திற்கே அமைச்சர் என்று மார்தட்டிக்கொள்ளும் கே.என்.நேரு சமத்துவபுர வீடு ஒதுக்கீடு முறைகேட்டில் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதுதான் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் நிர்வாகிகள் மீது அமைச்சர் கே.என்.நேரு தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் உண்மையான உடன்பிறப்புக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal