குளித்தலை அருகே கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வீதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் எஸ்.செபாஸ்டியன், சுடலைக்கண்ணு மற்றும் வழக்குரைஞர் திருமலைராஜா, அவரது உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் ஜன. 30-ஆம்தேதி குவாரி பகுதிக்குச் சென்று, டிரோன் மூலம் விடியோ எடுத்தனர்.

அப்போது, குவாரி பணியாளர்கள் செல்வம், மணிவேல், முருகேசன் ஆகியோருக்கும், கதிரவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குளித்தலை காவல்நிலையத்தில் குவாரி நிர்வாகம் தரப்பில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி(திமுக) மகன் விமலாதித்தன் தரப்பிலும், செய்தியாளர் கதிரவன் தரப்பிலும் புகர் அளிக்கப்பட்டது.

இருதரப்பினரின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட குளித்தலை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5-ஆம்தேதி, விமலாதித்தின் அளித்த புகாரின்பேரில் குவாரிக்குள் அத்துமீறி நுழைதல் 329(4), தட்டிக்கேட்ட தங்களை செய்தியாளர்கள் தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகிய பிரிவுகளின் கீழும், செய்தியாளர் கதிரவன் அளித்த புகாரின்பேரில், செய்தி சேகரிக்கச் சென்றவர்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் மற்றும் சிலர் அவதூறாக பேசி, மிரட்டி தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

மேலும் இந்த முதல்தகவல் அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் போலீஸார் நாளை திங்கட் கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal